அமெரிக்கா, பிரித்தானியா, அஸ்ரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இன்று புதன்கிழமை கூட்டாக AUKUS என்ற புதியதோர் கூட்டணியை அறிவித்துள்ளன. இந்த புதிய கூட்டணியின் எதிரி சீனா என்று கூறப்படாவிட்டாலும் அந்த உண்மை பொதுவாக அறியப்பட்டது.
AUKUS கூட்டின் இணக்கப்படி மூன்று நாடுகளும் தமது இராணுவ, தொழில்நுட்ப அறிவுகளை பகிர்ந்து கொள்ளும்.
2016ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து அஸ்ரேலியா 12 அனுமினில் இயங்கும் நீர்மூழ்கிகளை $90 பில்லியன் பெறுமதிக்கு கொள்வனவு செய்ய இணங்கி இருந்தாலும் அந்த உடன்படிக்கை தற்போது கைவிடப்பட்டு உள்ளது. பதிலாக அமெரிக்காவின் அணுமின் நீர்மூழ்கிகளையே அஸ்ரேலியா கொள்வனவு செய்யும்.
ஏற்கனவே பலமிழந்து வரும் சோவியத் காலத்து NATO மேலும் பலம் இழப்பதை இந்த புதிய கூட்டு காட்டுகிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் இந்த புதிய அணியில் இல்லை.
அதேவேளை ஜப்பான், அஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா the Quad என்ற அணியையும் சீனாவுக்கு எதிராக வளர்க்கிறது. இந்த அணி தலைவர்கள் இந்த மாதம் 24ம் திகதி கூடி பேசுவர்.