ஜேர்மனியில் உள்ள 34 பல்கலைக்கழக உணவகங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் விற்பனை செய்யப்படும் உணவுகளில் 96% உணவுகள் சைவ அல்லது vegan உணவுகளாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இறைச்சி வகை உணவுகள் 2% அளவிலும் மீன் உணவுகள் 2% அளவிலும் மட்டுமே இருக்கும்.
இந்த செய்தியை பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு வழங்கும் மாணவர் அமைப்பான Studierenden தெரிவித்து உள்ளது.
வழங்கப்படவுள்ள மொத்தம் 510 உணவுகளில் (meals) 341 உணவுகள் பால் பொருட்களையும் தவிர்த்த vegan உணவாகவும், 145 உணவுகள் சைவ உணவுகளாகவும் இருக்கும். அதேவேளை அசைவ உணவுகளாக 12 வகை இறைச்சி கொண்ட உணவுகளும், 12 வகை மீன் கொண்ட உணவுகளும் வழங்கப்படும்.
மாணவர்களின் விருப்பங்களுக்கு அமையவே சைவ உணவுகளின் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. 2010ம் ஆண்டிலேயே ஜேர்மனி பல்கலைக்கழகம் ஒன்றில் முதல் சைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. பின் 2019ம் ஆண்டில் முதல் vegan உணவகம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.
அங்கு இவ்வாறு சைவ உணவு பிரபலம் அடைய சைவ சமயம் காரணம் அல்ல. பதிலாக சைவ உணவுக்கு பின்னால் உள்ள நற்பயன்களே காரணம்.
ஒரு கிலோ இறைச்சியை பெற பலநூறு கிலோ தாவர உணவு மாடு போன்ற கால்நடைகளுக்கு வழங்கப்படும். அவ்வகை கால்நடை உணவுக்கான தாவரங்களை பயிரிடுவதற்கு பதிலாக மனிதர் உண்ணும் தாவரங்களை வளர்ப்பது சூழலை பாதுகாக்க உதவும். இதனால் மேச்சலுக்கு தேவையான காடழிப்பு குறைவது மட்டுமன்றி, குறைந்த அளவு நீரே பயன்படுத்தப்படும்.
காடழிப்பு மூலம் பெறப்படும் நிலங்களில் சுமார் 75% பங்கு நிலங்கள் இறைச்சிக்கான பண்ணை வளர்ப்புக்கே பயன்படுகிறது. சைவ உணவு இதை தடுக்கிறது.
அதேவேளை இந்து நாடான இந்தியாவில் அசைவம் உண்போர் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் மேற்கின் McDonald’s , KFC எல்லாம் இந்தியாவில் பெருகி வருகின்றன.