அமெரிக்க CIA உளவுப்படையின் செயலாளர் William Burns என்பவரும், தலிபானின் தலைவர் Abdul Ghani Baradar என்பவரும் நேற்று திங்கள் காபூல் நகரில் இரகசியமாக சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பேசிக்கொண்ட விசயங்கள் இதுவரை பகிரங்கத்துக்கு வரவில்லை. ஆனாலும் இரு தரப்பும் சந்திப்பை மறுத்துள்ளன.
மேற்படி சந்திப்புக்கு கட்டாரே உதவியதாக கூறப்படுகிறது. கட்டார் (Qatar) தொடர்ந்தும் ஆப்கானிஸ்தான் வளர்ச்சியில் பங்குகொள்ளும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதிகள் என்று எதிர்த்து போராடிய குழுவுடன் CIA தற்போது நேரடியாக உரையாடியுள்ளது.
1994ம் ஆண்டு தலிபான் இயக்கத்தை ஆரம்பித்த 4 பேரில் Abdul Ghani Baradar ஒருவர். 2010ம் ஆண்டு அமெரிக்காவும், பாகிஸ்தானும் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை ஒன்றின் பின் இவர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் 2018 வரை இருந்தவர். 2019ம் ஆண்டு கட்டார் சென்று தலிபானின் அரசியல் தலைவராக அங்கிருந்து இயங்கியவர்.
2020ம் ஆண்டு இவர் அக்கால அமெரிக்க சனாதிபதி ரம்புடன் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டவர். அதன்பின் இவர் ரம்புடன் தொலைபேசியில் உரையாடியவர். அமெரிக்க சனாதிபதி ஒருவருடன் உரையாடி ஒரேயொரு தலிபான் தலைவர் இவரே.
திங்கள் காலை முதல் இன்று செவ்வாய் காலை வரையான 24 மணி நேரத்தில் 12,700 பேர் 37 அமெரிக்க இராணுவ விமானங்கள் மூலமும், 8,900 பேர் ஏனைய நாடுகளின் விமானங்கள் மூலமும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஆகஸ்ட் 14ம் திகதி முதல் மொத்தம் 58,700 பேர் காபூலில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களில் தூதரக ஊழியர்கள், நிருபர்கள், வர்த்தகர்கள், ஆப்கான் நாட்டவர் ஆகிய பலரும் அடங்குவர்.