சிரியாவில் இப்போது மும்முனை யுத்தம்

Syria

சவூதி மற்றும் கட்டார் (Qatar) போன்ற நாடுகளில் இருந்து தாராளமான ஆயுதங்களை பெற்றுக்கொண்ட சிரியாவின் அரச எதிர்ப்பாளர் 2011 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் Bashar al-Assad தலைமையிலான சிரியாவின் அரசுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்திருந்தனர். இதற்கு மேற்கும் இஸ்ரவேலும் ஆதரவு. இந்த யுத்தத்தின் இறுதி நோக்கு ஈரானை முடக்குவதே. சிரியா மத்திய கிழக்கில் உள்ள ஈரானின் நட்பு நாடு. இந்த யுத்தம் கடந்த 2 வருடம் 9 மாத காலத்தில் சுமார் 120,000 உயிர்களை பலிகொண்டுள்ளது என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வெறும் கணிப்பீடு மட்டுமே.

2011 இல் இருமுனை யுத்தமாக தொடங்கிய இன் யுத்தம் தற்போது மும்முனை யுத்தமாக மாறியுள்ளது. சவூதி, கட்டார், மேற்கு தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த யுத்த சூழலை பயன்படுத்திய al-Qaeda ஆதரவு குழுக்கள் (ISIL: Islamic State of Iraq and the Levant) இப்போது இந்த யுத்தத்தை தம் வழிக்கு இழுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஒரு அங்கமாக சிரியாவின் மேற்கு ஆதரவு ஆயுதக்குழுக்களுக்கும் al-Qaeda ஆதரவு ஆயுதக்குழுக்களுக்கும்இடையே மோதல்கள் தொடங்கியுள்ளன. இந்த மோதல்கள் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 60 உயிர்கள் பலியாகியுள்ளன.

அதே நேரம் கடந்த சில நாட்களாக ஈராக்கில் ஈராக்  அரசுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட ISIL ஈராக்கின் Anbar மாகாணத்தை தமது கடுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக Anbar மாகாணத்து மிகப்பெரிய நகரான Fallujah தற்போது ISILலின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மாகாணத்தை மீட்க ஈராக் முனைந்து வருகிறது. இந்த சண்டைகளில் பயன்படுத்த அமெரிக்கா சிறு தொகை ஏவுகணைகளை ஈராக்குக்கு சில நாட்களின் முன் வழங்கியிருந்தது.

சிரியாவின் ஆட்சியை இராணுவ கவிழ்ப்பின் மூலம் கைப்பற்றிய Bashar இன் தந்தை Hafez al-Assad 1971 முதல் 2000 ஆட்சி செய்திருந்தார். Hafez குவைத்தில் இருந்து சதாமை விரட்ட அமெரிக்கா மற்றும் சவூதி போன்ற நாடுகளுடன் இணைந்தும் செயல்பட்டிருந்தார். Hafez இன் மறைவின் பின் அவரின் மகன் Bashar ஆட்சியை தனதாக்கி கொண்டிருந்தார்.