உலக அளவில் இயங்கும் நிறுவனங்கள் மீது குறைந்தது 15% வருமான வரி நடைமுறை செய்ய G7 நாடுகள் இன்று சனிக்கிழமை இணங்கி உள்ளன. இந்த இணக்கம் குறிப்பாக பல நாடுகளில் இயங்கும் Apple, Facebook, Amazon, Microsoft, Twitter போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை கருத்தில் கொண்டதே.
அயர்லாந்து போன்ற சில நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வருமானத்தை பெறும் நோக்கில் அவ்வகை நிறுவனங்களுக்கு குறைந்த வரியை தற்போது அறவிடுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளில் பெருமான்மையான வர்த்தகத்தை செய்து இலாபத்தை ஈட்டினாலும், அயர்லாந்து போன்ற நாடுகளில் தலைமையகத்தை கொள்வதால் அங்கு குறைந்த வரியை செலுத்துகின்றன.
உதாரணமாக பிரித்தானியா 19% வரி அறவிடும் காலத்தில், அயர்லாந்து 12.5% வரி மட்டுமே அறவிடுகிறது.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் வரி குறைந்த நாடுகளில் பெயரளவில் மட்டுமே தலைமையகத்தை கொண்டு இருக்கும். வேலைப்பாடுகளும் அனைத்தும் வருமானத்தை உழைக்கும் நாடுகளிலேயே நடைபெறும். இதை profit shifting என்பர்.
ஒவ்வொரு நாடும் குறைந்தது 15% வரியை கொண்டிருக்க வேண்டும் என்ற இணக்கம் நாடுகள் தம்முள் போட்டியிடுவதை தவிர்க்கும்.
தற்போது பல அமெரிக்க நிறுவனங்களே இந்த இணக்கத்தால் தாம் செலுத்தும் வரிகளை அதிகரிக்க நேரிடும்.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் கொண்ட இந்த இணக்கத்தை சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா என்பதை காலம்தான் கூறும்.