ரஷ்யாவில் பிறந்த Mikhail Kalashnikov என்பவரே உலக பிரசித்தமான AK-47 என்ற தாக்குதல் ஆயுதத்தை உருவாக்கியவர் ஆவார். 1919 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 94 ஆவது வயதில் இன்று திங்கள் கிழமை காலமானார்.
AK-47 என்பதன் விரிவாக்கம் Avtomat Kalashnikov 47 அல்லது Automatic Kalashnikov 47 ஆகும். இங்கு K அல்லது Kalashnikov என்பது இவரின் பெயரையும் 47 இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் (1947) குறிக்கும். இந்த ஆயுதம் 1948 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் (USSR) படைகளால் பாவிக்கப்பட தொடங்கி இருந்தது.
இன்று உலகில் மொத்தம் சுமார் 100 மில்லியன் AK-47 ஆயுதங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆயுதம் சாதாரணமாக 100 குண்டுகள் ஒரு நிமிடத்தில் செலுத்தக்கூடியது. இதில் இருந்து பாயும் குண்டுகள் சுமார் 715 m/sec (2350 ft/sec) வேகத்தில் வெளியேறும். இந்த குண்டு 300 முத்த 400 மீட்டர் வரையான தூரத்தில் உள்ள குறியை தாக்க வல்லது.
Mikhail Kalashnikov AK -47 ஐ உருவாக்கி இருந்தாலும் இவரிடம் இதற்கான சட்டப்படியான உரிமை (patent) இல்லை. இதனை இவர் சட்டப்படி பதிவு செய்திருக்கவில்லை.
வியட்னாம் யுத்த காலத்தில் அங்கு களத்தில் இருந்த அமெரிக்க இராணுவத்தினர் தமது அமெரிக்க தயாரிப்பான M-16 ஆயுதங்களை எறிந்துவிட்டு இறந்துபோன அல்லது கைதுசெய்யப்பட்ட வடவியட்னாம் போராளிகளிடம் இருந்த AK-47 எடுத்து பாவித்தனர் என 2007 ஆம் ஆண்டில் Mikhail Kalashnikov கூறியிருந்தார். தண்ணீரில் அமுக்கப்பட்ட அல்லது துச்சுகள் படிந்த AK-47 இலகுவாக தொடர்ந்தும் இயங்கும். ஆனால் அமெரிக்காவின் M-16 அவ்வாறான நிலைகளில் இயங்க மறுக்கும்.
படம்: Kremlin