20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜெர்மனி நமீபியாவில் யுத்த குற்றம் (genocide) செய்தது என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் Heiko Maas இன்று வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் ஜெர்மனி $1.34 பில்லியன் பணத்தை இந்த மக்களுக்கு செலவிடவும் முன்வந்துள்ளது.
ஆபிரிக்காவின் Herero மற்றும் Nama மக்கள் மீது, தற்போதைய நமீபியா (Namibia), அவர்களை ஆக்கிரமித்து இருந்த ஜெர்மனி 1904 முதல் 1908 வரையான காலத்தில் யுத்த குற்றங்களை செய்திருந்தது. 1884ம் ஆண்டு முதல் 1915ம் ஆண்டுவரை இப்பகுதி German South West Africa என்று அழைக்கப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின் பின் ஜெர்மனி இப்பகுதியை இழந்து இருந்தது.
இப்பகுதியில் வாழ்ந்த 80,000 Herero மக்களில் 65,000 பேரும், அத்துடன் இங்கு வாழ்ந்த 20,000 Nama மக்களில் 10,000 பேரும் ஜெர்மன் ஆக்கிரமிப்பாளரால் கொலை செய்யப்பட்டனர். ஆக்கிரமிப்புக்கு எதிராக கிளர்வோரும் அழிக்கப்பட்டனர்.
சுமார் 5 ஆண்டுகளாக செய்த பேச்சுக்களின் பின்பே ஜெர்மனி இந்த அறிவிப்பை இன்று செய்துள்ளது. 2005ம் ஆண்டு ஜெர்மனியும், நமீபியா அரசும் இந்த பேச்சுக்களை ஆரம்பித்து இருந்தன.
இந்த இணக்கம் ஜூன் மாதம் இரண்டு நாடுகளின் பாராளுமன்றங்களாலும் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும்.