உலக சனத்தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும்

உலக சனத்தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும்

சில ஆபிரிக்க நாடுகளை தவிர ஏனைய நாடுகளில் சனத்தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் என்று தரவுகள் கூறுகின்றன. 1900ம் ஆண்டுகளில் 1.6 பில்லியன் ஆக இருந்த உலக சனத்தொகை தற்போது சுமார் 7.8 பில்லியன் ஆக உள்ளது. அனால் இந்த தொகை வீழ்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து உள்ளன.

ஒருநாட்டின் சனத்தொகை மாறாது இருக்க சராசரியாக தாய் ஒன்று 2.1 குழந்தைகளை பெற வேண்டும். அதற்கும் குறைவான குழந்தைகளை தாய்மார் பெற்றால், சனத்தொகை குறைய ஆரம்பிக்கும்.

The Lancet வெளியிட்ட ஆய்வு ஒன்றின்படி 2100ம் ஆண்டளவில், மொத்தம் 195 நாடுகளில், 183 நாடுகளின் தாய்மார் 2.1 க்கும் குறைவான குழந்தைகளையே பெறுவர்.

பெருமளவில் குடிவரைவை கொண்ட பிரான்ஸ் (1.88), அஸ்ரேலியா (1.74), அமெரிக்கா (1.73), பிரித்தானியா (1.68), ஜெர்மனி (1.57), கனடா (1.5), இத்தாலி (1.29) போன்ற நாடுகளில் எல்லாம் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 2.1 க்கும் குறைவாகவே உள்ளன.

இத்தாலியின் Capracotta என்ற நகரில் உள்ள 18ம் நூற்றாண்டு கட்டிடமான Home of School Kindergarten தற்போது முதியோர் இல்லம் ஆக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு 5,000 ஆக இருந்த சனத்தொகை தற்போது 800 ஆக குறைந்து உள்ளது.

தென்கொரியாவில் தாய் ஒன்றுக்கான சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 0.92 ஆக மட்டுமே உள்ளது. கடந்த 59 மாதங்களாக அங்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. 1992ம் ஆண்டில் அங்கு 18 வயதுடையோர் தொகை சுமார் 900,000 ஆக இருந்தது. அத்தொகை தற்போது 500,000 மட்டுமே உள்ளது.

தற்போது 1.41 பில்லியன் ஆக இருக்கும் சீனாவின் சனத்தொகை 2100ம் ஆண்டளவில் 0.73 பில்லியன் ஆக குறையலாம் என்றும் நம்பப்படுகிறது.

பாகிஸ்தான் (3.51), இந்தியா (2.22), இலங்கை (2.2), பங்களாதேசம் (2.04) ஆகிய தென்னாசிய நாடுகளிலும் பிறப்பு குறைந்து செல்கிறது.

சில ஆபிரிக்க நாடிகளில் மட்டுமே தற்போதும் தாய்மார் 4 அல்லது 5 குழைந்தைகளை பெறுகின்றனர். இந்த நூற்றாண்டின் முடிவில் நைஜீரியாவின் சனத்தொகை சீனாவின் சனத்தொகையில் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.