இந்திய அம்பாணி குடும்பத்துள் மீண்டும் மோதல்?

இந்திய அம்பாணி குடும்பத்துள் மீண்டும் மோதல்?

இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பாணிக்கும், தற்போது செல்வத்தை இழந்த இளைய சகோதரன் அனில் அம்பாணி குடும்பத்துக்கும் இடையில் மீண்டும் மோதல் உருவாகிறதா என்று கேட்க வைக்கின்றன அனில் அம்பாணியின் முத்த புதல்வனின் கூற்றுகள். Jai Anmol என்ற அனில் அம்பாணியின் மூத்த மகன் கரோனா தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறைகளையும், மறைமுகமாக முகேஷ் போன்ற செல்வந்தர்களையும் பலமாக சாடி வருகிறார்.

பொதுவாக அமைதியான குணத்தை கொண்ட Jai Anmol வெளியிடும் கடுமையான கருத்துக்கள் பலரையும் வியக்க வைத்துள்ளன.

Jai Anmol தற்போது கரோனா முகக்கவசம், முடக்கம் போன்ற அரச நடவடிக்கைகள் மக்கள் அரசுக்கு அடிபணிவதை சோதனை (compliance test) செய்ய பயன்படுகிறது என்று சாடியுள்ளார். அத்துடன் அவர் தடுப்பு மருந்துக்கு எதிராகவும் பரப்புரை செய்கிறார்.

அதற்கும் மேலாக, கரோனா முடக்க காலத்தில் சாதாரண இந்தியர் மேலும் வறுமை அடைய, இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மட்டும் எவ்வாறு தமது செல்வத்தை அதிகரித்தார்கள் என்றும் Jai Anmol கேட்டுள்ளார் (It’s no coincidence that the losses of the common man are gains of the wealthiest). அது நேரடியாக தந்தை அனிலின் மூத்த சகோதரன் முகேஷை சாடுவதாக கருதப்படுகிறது.

முகேஷும் இந்திய பிரதமர் மோதியும் நெருக்கமான உறவை கொண்டுள்ளனர்.

முகேஷ் மற்றும் அனில் அம்பாணிகளின் தந்தை 2002ம் ஆண்டில் இறந்த பொழுது தனது சொத்துக்களுக்கு உயில் (will) எழுதாமலேயே மரணித்து இருந்தார். அக்காலத்திலேயே குடும்ப சண்டை ஆரம்பித்தது. முகேஷின் சொத்துக்கள் பெருகி தற்போது $73 பில்லியன் ஆக வளர, தம்பி அனில் தனது வர்த்தகங்கள் முறிய கடனில் மாண்டிருந்தார். அண்மையில் அனில் கடன் காரணமாக சிறை செல்ல இருந்த நிலையில், முகேஷ் பணம் வழங்கி அனிலை மீட்டு இருந்தார்.