(இளவழகன், 2021-04-08)
இன்று வியாழன் (2021-04-08) இலங்கையும், இந்தியாவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இணைந்து செயற்பட இணக்கம் ஒன்றை கொண்டுள்ளனர். இரு நாடுகளும் தாம் அறியும் ‘பயங்கரவாதிகள்’ தொடர்பான உண்மைகளை உடனுக்குடன் மறு தரப்புக்கு தெரியப்படுத்த இணக்கம் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் குழுவுக்கு Director of Intelligence Bureau பதவியில் உள்ள Arvind Kumar என்பவரும், இலங்கை குழுவுக்கு Inspector General of Police பதவியில் உள்ள C. D. Wickramaratne என்பவரும் அமர்வுக்கு தலைமை தாங்கி உள்ளனர்.
இந்த பயங்கவாதத்துக்கு எதிரான போர் நகைப்புக்குரியது. அமெரிக்காவின் முதல் ஐ.நா. வரை எவரும் பயங்கரவாதத்துக்கு சட்டப்படியான வரைவிலக்கணம் ஒன்றை கொண்டில்லை, கொள்ளப்போவதும் இல்லை. அவ்வாறு சட்டப்படியான வரைவிலக்கணம் கொள்ளாமைக்கு ஒரு பிரதான உள்நோக்கம் உண்டு.
நடைமுறையில் பயங்கரவாதிகளில் இரண்டு பிரதான வகைகள் உண்டு. முதலாவது எதிரியான பயங்கரவாதி, மற்றையது நட்பான பயங்கரவாதி. பறிபோன தனது மண்ணை மீட்க போராடும் பலஸ்தீன Hamas ஆயுத குழு அமெரிக்காவுக்கு பயங்கரவாதி. ஆனால் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை அமைக்க போராடும் Free Syrian Army என்ற ஆயுத குழு அமெரிக்காவுக்கு பயங்கரவாதி அல்ல.
மூன்றாம் பயங்கரவாதிகள் வகை மேலும் நகைப்புக்குரியது. மேசைக்கு மேலால் பயங்கரவாதி என்று கூறி, அதேவேளை மேசைக்கு கீழே நட்பாக இருக்கும் பயங்கரவாதிகள். PKK என்ற Kurdistan ஆயுத குழுக்கள் இந்த வகைக்குள் அடங்கும். ஏன் கனடா போன்ற நாடுகள் புலிகளை மேசைக்கு மேலே தடை செய்து, பின் கனடாவில் புலிகள் இயங்க ஆவன செய்வதும் இவ்வகையே. புலிகள் செய்வதை அல்கைடா கனடாவில் செய்ய முடியாது. காரணம் கனடாவுக்கு புலிகள் 3ம் வகை, அல்கைடா 1ம் வகை. அல்கைடாவின் முன்னோர், ஆப்கானிஸ்த்தான் முயாகுதீன், முன்னர் 2ம் வகையில் இருந்தது.
1984ம் ஆண்டு Ajaib Singh Bagri என்ற கனடிய சீக்கியர் “50,000 இந்துக்களை கொலை செய்யும் வரை நாம் அமைதி அடையோம்” என்று நியூ யார்க் நகரில் 4,000 ஆதரவாளர் முன்னிலையில் கூறியிருந்தார். ஆனால் அமெரிக்காவும், கனடாவும் மறுபக்கம் திரும்பி கூற்றை காணாதது போல் நடித்தன. அப்போது இந்தியா ரஷ்யா பக்கம் இருந்தது. அதே Bagri பின்னர் Air India Flight 182 தாக்குதலில் சந்தேக நபரானார். கனடாவில் இருந்து இந்தியா சென்ற அந்த விமான தாக்குதலுக்கு 329 பேர் பலியாகி இருந்தனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இந்தியாவின் பங்கு பிரதானம். இந்தியாவே இலங்கை தமிழரை அழைத்து, ஆயுத பயிற்சி வழங்கி, பாதுகாப்பு வழங்கி, பொருளாதார உதவிகள் வழங்கி வளர்த்தது. அப்போது இந்தியாவுக்கு ஒரு தேவை இருந்தது. இந்தியாவின் பங்கு இருந்திராவிடில், முள்ளிவாய்க்கால் 30 ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்திருக்கும், JVP அணிக்கு நிகழ்ந்ததுபோல்.
இலங்கையின் முன்னாள் சனாதிபதி ஜே. ஆர். 1985ம் ஆண்டு BBC செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியில் இந்தியாவே தமிழ் இயக்கங்களை வளர்ப்பதாக கூறி இருந்தார். அவரின் பார்வையில் பயங்கரவாதிகளாக இருந்த இலங்கை தமிழ் குழுக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் “… training camps in India…, …they have been trained in India…, …they are operating from India…” என்றெல்லாம் கூறியிருந்தார்.
இப்படியானோர் எப்படி பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுவார்? அப்போது அமெரிக்கா இந்தியாவின் முதலாம் எதிரி, கொழும்பு அமெரிக்கா பக்கம். ஆனால் இப்போ சீனா இந்தியாவின் முதலாம் எதிரி, கொழும்பும் அங்கேயும் இங்கேயும். மீண்டும் இலங்கையை தண்டிக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு தோன்றின், மீண்டும் இலங்கை தமிழரே இந்தியாவின் ஒரேயொரு ஆயுதம் ஆகும். அமெரிக்க-சீன முரண்பாடுகள் தொடர்ந்தும் உக்கிரம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
அது மட்டுமல்ல, இந்தியாவின் முதன்மை பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆயுத குழுக்கள். அனால் இலங்கை பாகிஸ்தான் குழுக்கள் மீது அவ்வாறான நிலைப்பாட்டை கொள்ளுமா?
இதையெல்லாம் கேட்டால் அது முந்தி இது இப்ப என்பார்களோ?
இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?