மொசாம்பிக் என்ற கிழக்கு ஆபிரிக்க நாட்டின் Palma என்ற எண்ணெய்வளம் கொண்ட நகரை இஸ்லாமிய ஆயுத குழு ஒன்று கைப்பற்றி உள்ளது. இந்த மோதலுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர் பலியாகி உள்ளனர். பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் தனது 1,000 ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுகிறது.
பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனம் Palma வில் சுமார் $20 பில்லியன் செலவில் எரிவாயு (Liquefied Natural Gas) அகழ்வு வேலைகளை செய்து வந்தது. பாதுகாப்பு இல்லாத காரணத்தால் Total தனது பணிகளை கடந்த ஜனவரி மாதம் நிறுத்தி இருந்தது. கடந்த புதன் கிழமை Total மீண்டும் பணிகளை ஆரம்பிக்க அறிவிப்பு விடுத்த உடனேயே ஆயுத குழு தாக்குதலை ஆரம்பித்தது.
சுமார் 200 ஊழியர்களும் அதிகாரிகளும் Amarula Palma என்ற ஹோட்டலில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை வெள்ளிக்கிழமை வேறு இடத்துக்கு பாதுகாப்பாக நகர்த்தும்போது இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் சிலர் பலியாகி உள்ளனர்.
அங்கிருந்து தனது ஊழியர்கள் 1,000 பேரை மீட்க பிரான்சின் Total நிறுவனம் கப்பல் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை அங்கு அனுப்பி உள்ளது. மேலும் பலர் வள்ளங்கள் மூலம் 250 km தெற்கே உள்ள Pemba என்ற நகரை அடைந்து உள்ளனர்.
போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக போர்த்துக்கல் கூறியுள்ளது. தென்னாபிரிக்க நாட்டவர் சிலரும் பாதிக்கப்பட்டு கூறப்டுகிறது.