நியூசிலாந்தின் Kermadec தீவுகளின் அருகே உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணியளவில் 8.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவுகள் நியூசிலாந்து பெருநிலத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 1,000 km தூரத்தில் உள்ளன. அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 3 மீட்டருக்கும் அதிக அளவில் அலைகள் கரையை அடையலாம் என்றும் கூறப்படுகிறது.
குறைந்தது 3 பெரிய நடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. முதல் நடுக்க எச்சரிக்கை இரத்து செய்யப்பட்டு இருந்தாலும் மூன்றாம் நடுக்கம் மீண்டும் சுனாமி எச்சரிக்கையை அறிவிக்க வைத்துள்ளது. முதல் இரண்டு நடுக்கங்களும் 7.4, 7.3 அளவிலானவை. மூன்றாவது நடுக்கமே 8.1 அளவிலானது.
இந்த நடுக்கத்தின் மையம் சுமார் 19 km ஆழத்தில் அமைந்தது என்று அமெரிக்காவின் Geological Survey கூறுகிறது. Pacific தகடும் (tectonic plate) Australia தகடும் சந்திக்கும் இந்த இடத்தில் 1976ம் ஆண்டு 8.0 அளவிலான நடுக்கம் இடம்பெற்று இருந்தது.
Bay of Islands முதல் Whangarei வரையான கரையோர பகுதியிலும், மற்றும் Matata முதல் Tolaga bay வரையான கரையோர பகுதியிலும் உள்ள மக்கள் உட்பகுதிகளுக்கு நகர கேட்கப்பட்டு உள்ளனர். அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளதால் மக்களை நடந்து செல்லுமாறும் கூறப்பட்டு உள்ளது.