2018ம் ஆண்டு பத்திரிகையாளர் கசோகியை (Jamal Khashoggi) துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்துள் படுகொலை செய்ததை அமெரிக்காவின் உளவுப்படை ஆராய்ந்து, அறிக்கை ஒன்றை ரம்ப் காலத்து அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கி இருந்தது. ஆனால் சவுதி மீது விருப்பு கொண்டிருந்த முன்னாள் சனாதிபதி ரம்ப் அந்த அறிக்கை பகிரங்கத்துக்கு வருவதை தடுத்து இருந்தார்.
ஆனால் தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடென் அந்த அறிக்கையை விரைவில் பகிரங்கம் செய்யவுள்ளார். அதில் குறிப்பாக சவுதியின் இளவரசர் Mohammed bin Salman படுகொலையில் கொண்டிருந்த பங்கு விபரிக்கப்பட்டு உள்ளது.
சவுதி நாட்டவரான கசோகியின் சவுதி தொடர்பாக அமெரிக்காவின் Washington Post பத்திரிகையில் பதித்த பதிவுகளை Salman கடுமையாக எதிர்த்து இருந்தார். அதனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதிய கசோகி அமெரிக்காவிலேயே தங்கி இருந்தார்.
தனக்கு தேவையான அரச சான்றிதழ் ஒன்றை எடுக்க கசோகி சவுதிக்கு செல்லாமல், துருக்கியில் உள்ள தூதரகம் சென்று பெற முனைந்தார். அப்போதே அவர் அங்கு படுகொலை செய்யப்பட்டார். சவுதி முதலில் கொலையை மறுத்து இருந்தாலும், பின்னர் படுகொலையை ஏற்றுக்கொண்டு இருந்தது. ஆனால் அது சில இடைநிலை அதிகாரிகளில் செயல் அது என்று கூறியது.