இராணுவ கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்திருந்த நையீரியாவின் முன்னாள் சர்வாதிகாரி கொள்ளையடித்த பணத்தை தேடிவருகிறது தற்போதைய நைஜீரிய அரசு. இந்த முயற்சி கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. ஓரளவு கொள்ளையடித்த பணம் முடக்கப்பட்டு நையீரியா திரும்பி உள்ளன.
Sani Abacha என்ற முன்னாள் இராணுவ அதிகாரி 1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு அதிகாரியாக பதவியை அடைந்து இருந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் இராணுவ கவிழ்ப்பு மூலம் அந்நாட்டின் தலைமை பதவியை கைப்பற்றி இருந்தார். தனது 1993 முதல் 1998 வரையான ஆட்சிக்காலத்தில் இவர் பெருமளவு அரச சொத்தை கொள்ளையிட்டார். இவர் கொள்ளையிட்ட சொத்துக்களின் பெறுமதி சுமார் $3 பில்லியன் ($3,000 மில்லியன்) என்று கூறப்படுகிறது.
அனால் கொள்ளையிட்டத்தை அனுபவிக்க முன் தனது 54ம் வயதில், 1998ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி, அவர் மர்மமான மரணத்தை அடைந்தார்.
கொள்ளையடித்தவர் மரணமாக, கொள்ளையிட்ட பணம் உலகம் எங்கும் பரவி இருந்தது. அவற்றை சர்வாதிகாரியின் குடும்பமும், கூட இருந்தவர்களும் தமது கைகளுக்கு எடுக்க முனைந்துள்ளனர்.
பின்வந்த நையீரிய அரசு கொள்ளையிடப்பட்ட பணத்தை மீட்க Enrico Monfrini என்ற சுவிஸ் நாட்டு சட்டத்தரணியின் உதவியை நாடியது. அவர் மீட்கப்படும் பணத்தின் 4% தனது கூலி என்ற இணக்கத்தில் 1999ம் ஆண்டு முதல் செயற்பட ஆரம்பித்தார்.
2007ம் ஆண்டு வரையான காலத்தில் சுவிஸ் வங்கியில் இருந்த $508 மில்லியன் முடக்கப்பட்ட பணம் நையீரியா சென்றதாக Monfrini கூறியிருந்தார். 2018ம் ஆண்டளவில் சுவிஸில் இருந்து நையீரியா திரும்பிய தொகை சுமார் $1 பில்லியன் என்றும் கூறப்படுகிறது.
Liechtenstein என்ற சிறிய ஐரோப்பிய நாடும் 2014ம் ஆண்டு $277 மில்லியன் பணத்தை நையீரியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
2020ம் ஆண்டு மேலும் $308 மில்லியன் பணமும் Channel Island of Jersey என்ற இடத்தில் இருந்து நையீரியா திரும்பி உள்ளது.
தற்போது மேலும் $30 மில்லியன் பிரித்தானியாவிலும், $144 மில்லியன் பிரான்சிலும் உள்ளதாக Monfrini கூறியுள்ளார். அவற்றை நையீரியா திருப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.