தாய்வானை சீண்டும் சீனா, அமெரிக்கா விசனம் 

தாய்வானை சீண்டும் சீனா, அமெரிக்கா விசனம் 

சீனாவின் விமானப்படை விமானங்கள் அடிக்கடி தாய்வானின் வான்பரப்புள் சென்று வருகின்றன. இதை அமெரிக்கா கண்டிக்கிறது. தாய்வானுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்வதை சீனா பதிலுக்கு கண்டிக்கிறது.

இன்று ஞாயிறு (2021/01/24) மட்டும் 12 சீன யுத்த விமானங்கள், 2 குண்டுவீச்சு விமானங்கள், 1 வேவு விமானம் ஆகியன தாய்வானின் தென்பகுதியை ஊடறுத்து சென்றுள்ளன. நேற்று சனிக்கிழமை 8 யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்பு ஊடே சென்று வந்திருந்தன.

ஒவ்வொரு தடவையும் சீனா விமானங்கள் தாய்வானை அணுகும்போது, தாய்வானின் யுத்த விமானங்கள் சில அவற்றை இடைமறிக்க செல்லும். அவ்வாறு செய்வது சிறிய நாடான தாய்வானுக்கு பெரிய செலவை தொடர்ந்தும் ஏற்படுத்தி, மன உளைச்சலையும் தோற்றுவிக்கிறது. தாய்வானின் பாதுகாப்பு செலவில் பெருமளவு சீனாவின் சீண்டலை எதிர்நோக்க விரையமாகிறது.

2020ம் ஆண்டு மட்டும் சீனா 1,710 வான் மூல யுத்த விமான ஊடறுப்புகளையும், 1,029 கடல் மூல யுத்த கப்பல் ஊடறுப்புகளையும் செய்துள்ளது என்று கூறுகிறது தாய்வான.

தாய்வான் ஐ.நாவில் ஒரு நாடு அல்ல என்றாலும் தாய்வான் பிரதிநிதியான Hsiao Bi-khim என்பவரை பைடெனின் பதவியேற்பு வைபவத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தார். அமெரிக்கா தாய்வானை தனக்கு எதிராக வளர்ப்பதை சீனா விரும்பவில்லை.

அதேவேளை அமெரிக்காவின் US Air Force National Air and Space intelligence Center (NASIC) சீனாவின் புதிய நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் JL-3 என்ற ஏவுகணை 10,000 km தூரம் செல்ல வல்லது சென்று கூறுகியுள்ளது. இந்த ஏவுகணை ஒவ்வொன்றும் பல அணு ஆயுதங்களை காவவும் வல்லது என்றும்கூறப்பட்டுள்ளது. ஆனாலும் சீனா இதுவரை தன்னிடம் JL-3 இருப்பதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. சீனாவின் JL-2 ஏவுகணை 7,500 km தூரம் மட்டுமே செல்ல வல்லது.