லிபியா, யெமென் ஆகிய நாடுகளிலும் மனிதத்துவம் அற்ற வகையில் யுத்தங்கள் இடம்பெறுவதாக அழும் ஜெர்மனி அதே நாடுகளுக்கு பெருமளவு ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் இந்த செய்கையால் ஜெர்மனி கடந்த ஆண்டில் $1.41 பில்லியன் வருமானம் பெற்றுள்ளது.
2020ம் ஆண்டு ஜெர்மனி எகிப்துக்கு $914 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. லிபியாவில் சண்டையிடும் முன்னாள் ஜெனரல் Khalifa Haftar தரப்புக்கு எகிப்த், சவுதி, UAE, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன.
மறுபுறம் யெமெனில் இடம்பெறும் யுத்தத்துக்கும் ஜெர்மனியின் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு ஈரான் ஒரு தரப்புக்கும், சவுதி, எகிப்த், UAE ஆகியன மறுதரப்புக்கும் உதவுகின்றன. யெமென் யுத்தத்துக்கு கடந்த 6 ஆண்டுகளில் 233,000 பேர் பலியாகி உள்ளனர்.
கட்டாருக்கு ஜெர்மனி கடந்த ஆண்டு $370 மில்லியன் பெறுமதிக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது.
2105ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலத்தில் உலக அளவில் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்களில் 76% ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய 5 நாடுகளால் விற்பனை செய்யப்பட்டவை.