கடந்த நவம்பர் மாத தேர்தலில் தோல்வி அடைந்த அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆதரவாளர் அமெரிக்காவின் காங்கிரசில் (US Capitol) இன்று வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். பைடென் வெற்றியை காங்கிரஸ் உறுதி செய்யும் நிகழ்வின் பொழுதே மேற்படி வன்முறைகள் நிகழ்கின்றன. புதன்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் வன்முறைகள் ஆரம்பமாகி உள்ளன.
தெரு சண்டைகள் போன்ற சண்டைகள் காங்கிரஸ் உள்ளே பாதுகாப்பு படையினருக்கும், ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்று உள்ளன. சிலர் துப்பாக்கி சூட்டுக்கு காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்த பலர் வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். பொதுவாக மூன்றாம் உலக நாடுகளில் இடம்பெறும் அடிபிடிகள் அமெரிக்காவின் இரண்டாம் பிரதான அரச கட்டிடத்தில் நிகழ்கின்றன.
கண்ணீர்ப்புகை குண்டுகளும் வீசப்பட்டு உள்ளன. அதேவேளை அப்பகுதி அதிகாரிகள் மேலும் National Guard படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். Washington DC முதல்வர் Muriel Bower அப்பகுதிக்கு புதன் மாலை 6:00 மணி முதல் வியாழன் காலை 6:00 மணிவரை ஊரடங்கு சட்டத்தை அறிவித்து உள்ளார்.
உதவி சனாதிபதி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர்.
பைடெனின் வெற்றியை தடுக்கும் ரம்பின் இறுதி அணுகுமுறையே இது. ஆனாலும் சட்டப்படி பைடெனின் வெற்றியை தடுக்க இடமில்லை.
Georgia மாநிலத்தில் இன்று இடம்பெறும் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான தேர்தலில்களிலும் ரம்பின் கட்சி தோல்வி அடையும் நிலையில் உள்ளது. இரண்டு ஆசங்களும் பைடென் கட்சிக்கு கைமாறினால், பைடேன் கட்சிக்கு 50 ஆசங்களும், ரம்ப் கட்சிக்கு 50 ஆசங்களும் காங்கிரசில் இருக்கும். அந்நிலையில் உதவி சனாதிபதி தனது வாக்கை அளித்து பைடெனின் தீர்மானங்களை நடைமுறை செய்யலாம்.
சனநாயகம் உலகின் பல நாடுகளின் தோல்விகளுக்கு காரணமாகி இருந்தது. தற்போது சனநாயகத்தின் காவலர் என்று தன்னை கூறும் அமெரிக்காவையும் சனநாயகம் மெல்ல அழிக்க ஆரம்பித்து உள்ளது.