வழமைக்கு மாறாக தனது ஆட்சி சந்தித்த தோல்விகளுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார் வடகொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un). ஹிட்லர், சதாம் போன்ற சர்வாதிகாரிகள் பொதுவாக தம் தரப்பு தோல்விகளை ஏற்பது இல்லை. இந்நிலையில் வடகொரியா தலைவரின் வருந்தல் வித்தியாசமாக தெரிகிறது.
அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் 8ம் அமர்வின் (Workers’ Party’s 8th Congress) பொழுதே கிம் தமது தோல்வியை ஏற்றுள்ளார். “ஏறக்குறைய எல்லா துறைகளும் எதிர்பார்த்த அளவில் இருந்து மிக குறைந்த அபிவிருத்தியையே அடைந்துள்ளன” என்றும் “துணிந்து தவறுகளை அறி, இல்லையேல் அவை வளர்ந்து மிக பெரிய தவறுகளாக மாறும்” என்றும் கிம் கூறியுள்ளார்.
பொருளாதார தடைகள் மட்டுமன்றி இயற்கை அழிவு, கரோனா போன்றனவும் வடகொரியாவை பாதித்து உள்ளன. ஆனாலும் வடகொரியா கரோனா தொற்று மற்றும் மரண தொகைகளை வெளியிடுவது இல்லை.
கரோனா காரணமாக வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகங்களும் முடங்கி உள்ளன. அதனால் வடகொரியாவுள் உணவு விலைகளும் அதிகரித்து உள்ளன.