அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது Executive Order மூலம் சீனாவின் 3 தொலைத்தொடர்பு நிறுவனங்களை NYSE (New York Stock Exchange) என்ற பங்கு சந்தையில் இருந்து இடைநிறுத்த (de-list) அறிவித்து இருந்தார். அதன்படி நாளை வியாழன் முதல் அந்த 3 நிறுவனங்களும் NYSE பங்கு சந்தையில் தமது பங்குகளை சந்தைப்படுத்துவது தடை செய்யப்படவிருந்தது. ஆனால் அவ்வாறு தடை செய்வதை இடைநிறுத்தி உள்ளதாக இறுதி நேரத்தில் NYSE கூறியுள்ளது.
சீனாவின் China Telecom, China Mobile, China Unicom (Hong Kong) ஆகிய மூன்று நிறுவனங்களுமே தடை செய்யப்படவிருந்த சீன நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் மிக பெரும்பான்மையான பங்குகள் சீனாவில் உள்ள பங்கு சந்தைகளிலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. ஒரு சிறு தொகை மட்டுமே நியூ யார்க் பங்கு சந்தையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.
NYSE தனது திடீர் மனமாற்றத்துக்கான காரணத்தை கூறவில்லை. பதிலுக்கு தாம் விசயத்தை மேலும் ஆராய்வதாக கூறியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 12ம் திகதி மேற்படி Executive Order ரம்பால் அறிவிப்பு செய்யப்பட்ட பின்னர் சீனா தான் உரிய பதிலடி எடுக்கவுள்ளதாக கூறியிருந்தது. ஆனால் எவ்வகை பதிலடியை எடுக்கவுள்ளது என்று சீனா பகிரங்கமாக அறிவித்து இருக்கவில்லை.
பெருமளவு சீன முதலீடுகள் அமெரிக்காவில் முதலிடப்பட்டு உள்ளன. ஓய்வூதிய முதலீடுகள் போன்ற பெருமளவு அமெரிக்க முதலீடுகளும் சீனாவில் முதலிடப்பட்டு உள்ளன. சீனாவின் CNOOC (China National Offshore Oil Corporation) தனது பங்குகளை தொடர்ந்து NYSE யில் சந்தைப்படுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏன் 3 தொழிநுட்ப நிறுவனங்களை மட்டும் ரம்ப் தடை செய்ய முனைந்தார் என்றும் கேட்கப்படுகிறது.