2017ம் ஆண்டு ஜூன் மாதம் கட்டார் (Qatar) மீது சவுதி விதித்திருந்த போக்குவரத்துக்கு, எல்லை, கடல், அரசியல் தடைகளை சவுதி உடனடியாக விலக்க உள்ளது என்று குவைத்தின் வெளிவிவகார அமைச்சர் Ahmad Nasser Al Sabah இன்று திங்கள் தெரிவித்து உள்ளார்.
தடை விலக்கப்பட்டால் கட்டார் விமான சேவை விமானங்கள் சவுதி, UAE ஆகிய நாடுகளுக்கு மேலாக பறக்க முடியும். பெரியதோர் நாடான சவுதிக்கு மேலாக பறக்க முடியாததால் தற்போது கட்டார் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றியே தமது பயணங்களை மேற்கொள்கின்றன.
கட்டார் தனது Al Jazeera செய்தி நிறுவனத்தை மூட வேண்டும், ஈரானுடன் தொடர்புகளை துண்டிக்க வேண்டும், எகிப்தின் Muslim Brotherhood யுடனான உறவை நிறுத்த வேண்டும், கட்டாரில் உள்ள துருக்கியின் தளத்தை மூட வேண்டும் என்ற நிபந்தனைகள் உட்பட 13 நிபந்தனைகளை சவுதி 2017ம் ஆண்டு கட்டார் மீது விதித்து இருந்தது. சவுதியுடன் கூடவே UAE, பகிரைன், எகிப்த் உட்பட 9 நாடுகள் கட்டார் மீது தடையை விதித்தன.
இன்றைய திடீர் தடை நீக்கலுக்கு காரணம் என்ன என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. கட்டார் ஏதாவது நிபந்தனைகளுக்கு இணங்கியதா என்றும் கூறப்படவில்லை.
சவுதியின் தடையால் கட்டார் சிரமம் அடைந்தாலும், சவுதிக்கு சரண் அடையும் நிலையை அடையவில்லை. பதிலுக்கு கட்டார் உணவு உற்பத்தியில் மேலும் தன்னிறைவு அடைந்திருந்தது.