உலகில் அதிகூடிய சனத்தொகையை கொண்டிருந்த சீனா தனது சனத்தொகையை குறைக்க 1979 ஆம் ஆண்டு ஒரு குழந்தை மட்டும் என்ற சட்டத்தை நடைமுறை செய்திருந்தது. அண்மையிலேயே அந்த சட்டம் அங்கு தளர்த்தப்பட்டது. தற்போது இந்தியா மாநில அரசுகள் இரு குழந்தைகள் மட்டும் என்ற சட்டத்தை மறைமுகமாக நடைமுறை செய்கிறன.
அசாம் மாநிலத்தில் வரும் ஜனவரி 1ம் திகதி முதல் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பம் சில மாநில அரச சலுகைகளை இழக்கும். உதாரணமாக அரசில் பணிசெய்த கணவர் இறந்தால் அசாம் அரசு மனைவிக்கு தகுந்த அரச தொழில் வழங்கும். அனால் வரும் ஜனவரி முதல் குடும்பத்துக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் மேற்படி சலுகை வழங்கப்படாது.
ஆனாலும் மத்திய அரசு குழந்தைகள் எண்ணிக்கையில் தனது கொள்கைகளில் மாற்றங்கள் எதையும் இதுவரை செய்யவில்லை. சீனாவின் ஒரு குழந்தை சட்டம் ஆண் குழந்தைகளை மிகையாக தருவித்ததை சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஜூலையில் Rakesh Sinha என்ற பா.ஜ. கட்சி உறுப்பினர் Population Regulation Bill என்ற சட்ட வரைபு ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தார். அந்த சட்டம் மூலம் அதிகம் குழந்தைகள் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை குறைக்க அவர் முயன்றார். அவரின் முனைவு தற்போதும் முடக்கத்தில் உள்ளது.
2016ம் ஆண்டு Prahlad Singh Patel என்ற பா.ஜ. உறுப்பினர் இன்னோர் சனத்தொகை கட்டுப்பாட்டு சட்ட வரைபை முன்வைத்திருந்தார். 2018ம் ஆண்டு 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு குழந்தைகள் மட்டும் என்ற சட்டத்தில் நடைமுறை செய்ய கேட்டிருந்தனர்.
1992-1993 ஆண்டு காலத்தில் இந்தியாவின் ஒரு தாய்க்கான பிறப்பு விகிதம் 3.4 ஆக இருந்திருந்தாலும், 2015-1016 ஆண்டில் அது 2.2 ஆக குறைந்து உள்ளது. சராசரியாக பிறப்பு வீதம் 2.1 ஆக இருப்பின் சனத்தொகை கூடாமலும், குறையாமலும் இருக்கும்.
குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் உள் நோக்கம் இந்திய முஸ்லீம்களின் சனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவே என்று சிலர் கருதினாலும், உண்மையான தரவுகள் இந்துக்களுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமியர் அதிகம் பிள்ளைகளை பெறுகின்றனர் என்ற கருத்தை நிராகரிக்கின்றன. இரு தரப்பும் ஏறக்குறைய நிகரான அளவிலேயே குழந்தைகளை தற்காலங்களில் பெறுகின்றனர்.
National Family Health Survey கணிப்பின்படி 2005-2006 ஆண்டில் இந்து தாய் ஒருவருக்கான பிறப்பு விகிதம் 2.59 குழந்தைகள் ஆகவும் முஸ்லீம் பிறப்பு விகிதம் 3.4 ஆகவும் இருந்துள்ளன. ஆனால் அவை தற்போது முறையே 2.13 ஆகவும், 2.62 ஆகவும் உள்ளன. அதனால் முஸ்லீம்கள் பிறப்பு வீதம் வேகமாக குறைந்து உள்ளது.