நிவார் (Nivar) புயலுக்கு பின் இன்னோர் புயல் இலங்கைக்கு கிழக்கே உருவாகி வருகிறது. Burevi என்று பெயரிடப்படவுள்ள இந்த சூறாவளி புதன்கிழமை (2020/12/02) இலங்கையை தாக்க ஆராம்பிக்கும் என்று இந்தியாவின் Meteorological Department (IMD) கூறுகின்றது. ஆனால் இதுவரை அந்த தாழமுக்கம் சூறாவளிக்கான உக்கிரத்தை அடையவில்லை.
இந்த சூறாவளியின் மையம் இலங்கையின் கிழக்கே நுழைந்து, மேற்கே வெளியேறி மீண்டும் இந்துசமுத்திரத்தை அடையும். Burevi இந்த ஆண்டுக்கான 5 ஆவது இந்து சமுத்திர சூறாவளி.
இந்த சூறாவளி சுமார் 8 முதல் 12 அங்குல (200 mm – 300 mm) மழை வீழ்ச்சியை வழங்கலாம் என்று கணிக்கப்படுகிறது. சூறாவளியின் மைய பகுதியில் 12 முதல் 18 அங்குல மழையும் பொழியலாம். இதன் அதிகூடிய காற்று வீச்சு மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 km ஆக இருக்கும்.
சூறாவளிகளின் பெயர்கள் World Meteorological Organization விதிகளுக்கு அமைய சூட்டப்படும். இந்துசமுத்திர சூறாவளிகளுக்கு பங்களாதேசம், இந்தியா, ஈரான், மாலைதீவு, பர்மா, ஓமான், பாகிஸ்தான், கட்டார், சவுதி, இலங்கை, தாய்லாந்து, UAE, யெமென் ஆகிய நாடுகள் பெயர்களை வழங்கும். Nivar என்பது ஈரான் வழங்கிய பெயர். பாரசீக மொழியில் நிவார் என்ற சொல் ஒளியை (light) குறிக்கும். Burevi என்பது மாலைதீவு வழங்கிய பெயர்.
நிவார் பெருமளவு வெள்ளத்தை தோற்றுவித்தாலும், தமிழ்நாடு தற்போது வளமையிலும் 15% குறைந்த மழை வீழ்ச்சியையே பெற்றுள்ளது. கேரளா வளமையிலும் 30% குறைந்த மழை வீழ்ச்சியை பெற்றுள்ளது.