நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Koshobe என்ற கிராமத்தில் குறைந்தது 110 உழவர் சனிக்கிழமை பிற்பகல் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் பல பெண்களும் கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆயுதங்களுடன் வந்தவர்கள் நெல் அறுவடை செய்யும் இடங்களில் இருந்தவர்களையே படுகொலை செய்துள்ளனர். இவர்களில் பலர் அறுவடை தொழில் தேடி வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள். இப்பகுதி அண்மை காலங்களில் பல வன்முறைகளுக்கு இரையாகி உள்ளது.
தாக்குதலுக்கு ஒருவரும் உரிமை கூறவில்லை. ஆனால் இப்பகுதியில் Boko Haram மற்றும் Islamic State in West Africa Province (ISWAP) ஆகிய குழுக்கள் முன்னர் பல படுகொலைகளை செய்து உள்ளன. 2009 ஆண்டு முதல் இங்கு சுமார் 30,000 பேர் வன்முறைகளுக்கு பலியாகியும், 2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
கிராமங்களில் சிறு தொகைகளில் இருந்த அரச இராணுவம் தமது பாதுகாப்பு கருதி பின்வாங்கி பெரிய முகாம்கள் அமைத்து இருக்க, கிராமங்கள் தற்போது பாதுகாப்பு இன்றி உள்ளன. அதனால் இராணுவத்தின் மரண தொகை குறைந்தாலும், பொதுமக்கள் மரண தொகை அதிகரித்து உள்ளது.
நைஜீரியா மட்டுமன்றி, நீஜெர் (Niger), சாட் (Chad) கமரூன் (Cameroon) ஆகிய நாடுகளிலும் வன்முறைகள் பரவி உள்ளன.