ஐரோப்பிய அரிசி சந்தையில் பஸ்மதி (basmati) என்ற சொல்லை பயன்படுத்தும் உரிமையை இந்தியாவின் 7 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் உற்பத்தியாகும் பஸ்மதி அரிசிக்கு மட்டும் வழங்குமாறு இந்தியா விண்ணப்பம் செய்துள்ளது. பஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடான பாகிஸ்தான் இந்திய விண்ணப்பத்தை நிராகரித்து வாதாடுகிறது.
உண்மையில் இந்தியாவின் விண்ணப்பம் 2018 ஆம் ஆண்டே தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், அந்த விசயம் தற்போதே பகிரங்கத்துக்கு வந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பாகிஸ்தான் எதிர்ப்பு ஆவணத்தை சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் புஞ்சாப் மாநிலமும் பஸ்மதி விளைவிக்கும் மாநிலங்களில் ஒன்று என்றாலும், பாகிஸ்தானின் பக்கம் உள்ள புஞ்சாப் மாநிலமும் பஸ்மதி அரிசியை விளைவிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் “basmati” என்ற பத உரிமையை இந்தியாவுக்கு வழங்காமல், “Indian basmati” என்ற பத உரிமையை இந்தியாவுக்கு வழங்க முனையலாம். அவ்வாறு செய்வதும் பாகிஸ்தானை “Pakistan basmati” என்று அழைக்க நிர்பந்திக்கும்.
கடந்த மூன்று காலாண்டுகளில் மட்டுமே இந்தியா $4.3 பில்லியன் பெறுமதியான பஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது என்கிறது All India Rice Exporters Association. பாகிஸ்தான் ஆண்டு ஒன்றில் சுமார் $580 மில்லியன் பெறுமதியான பஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்கிறது.