இமயமலை பகுதில் ஆரம்பிக்கும் Yarlung Tsangpo என்ற ஆறு 2,840 km கிழக்கே சென்று, அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியாவுள் நுழைகின்றது. இந்தியாவில் பிரம்மபுத்ரா (Brahmaputra) என்று பாயும் இந்த ஆறு பின் Jamuna (Yamuna அல்ல) ஆறாக மாறி கங்கை ஆற்றுடன் இணைகிறது. பங்களாதேசத்துள் நுழையும் கங்கை ஆறு பத்மா (Padma) ஆறாக கடலுள் வீழ்கிறது.
சீனா தனது பகுதியில் பாயும் இந்த ஆற்றை மறித்து குறைந்தது 11 நீர்மின் அணைகளை நிர்மாணிக்கிறது. அவற்றுள் சில ஏற்கனவே நீர்மின்னை உருவாக்கும் பணியை ஆரம்பித்து உள்ளன. Zangmu, Bayu, Jiexi, Langta, Dakpa, Nang, Demo, Namcha, Metok ஆகிய பகுதிகளிலேயே மேற்படி நீர்மின் அணைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய-சீன எல்லைக்கு தொலைவிலேயே உள்ளன.
ஆனால் சீனா தற்போது மிகப்பெரிய நீர்மின் அணை ஒன்றை இந்திய-சீன எல்லைக்கு அருகில் நிர்மாணிக்க முனைகிறது. இதனால் இந்தியா கவலை கொண்டுள்ளது. இந்த அணைக்கட்டு இந்தியாவுக்கு கிடைக்கும் நீரின் அளவை சீனா கட்டுப்படுத்த வழிவகுக்கும் என்பதே இந்தியாவின் கவலை.
தற்போது உலகத்திலேயே மிக பெரிய நீர்மின் அணைக்கட்டு சீனாவில் உள்ள Three Gorges Dam (22,500 MW) ஆகும். இந்திய எல்லையோரம் சீனா திட்டமிடும் அணைக்கட்டு Three Gorges அணையிலும் இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.