சட்ட ஒழுங்கில் இலங்கைக்கு 83 புள்ளிகள்

சட்ட ஒழுங்கில் இலங்கைக்கு 83 புள்ளிகள்

அமெரிக்காவின் Gallup என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட 2020 ஆம் ஆண்டுக்கான சட்ட ஒழுங்கு சுட்டியில் இலங்கை 83 புள்ளிகளை பெற்றுள்ளது. பாகிஸ்தானும் பங்கதேசமும் 81 புள்ளிகளையும், இந்தியா 79 புள்ளிகளையும் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 43 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் சுமார் 1,000 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியது. இவர்களின் கருத்துக்களும் வேறுசில கணியங்களும் சுட்டி பதிப்பிடலுக்கு பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 144 நாடுகள் இந்த ஆய்வில் பங்கு கொண்டிருந்தன. இந்த ஆண்டுக்கான உலக சராசரி 82 புள்ளிகள்.

சிங்கப்பூர், Turkmenistan ஆகிய இரண்டு நாடுகளும் 97 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளன. சிங்கப்பூர் 2015 ஆம் ஆண்டு முதல் முதலாம் இடத்திலேயே உள்ளது.

மூன்றாம் இடத்தில் 95 புள்ளகளை கொண்ட சீனா உள்ளது. கடந்த ஆண்டு சீனா 91 புள்ளிகளையும், 2017 ஆம் ஆண்டு 88 புள்ளிகளையும் கொண்டிருந்தது.

ஐரோப்பிய நாடுகளில் அஸ்ரியாவும் (Austria), சுவிற்சலாந்தும் 92 புள்ளிகளை பெற்றுள்ளன. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் 85 புள்ளிகளை பெற்றுள்ளன. கனடா 86 புள்ளிகளை பெற்றுள்ளது.

அண்மைக்கால வன்முறைகள் காரணமாக ஹாங் காங் 76 புள்ளிகளை மட்டுமே பெற்று 82 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 91 புள்ளிகளை பெற்ற ஹாங் காங் 5 ஆம் இடத்தில் இருந்தது.