சீனாவின் CanSinoBio என்ற மருத்துவ ஆய்வு நிலையத்துக்கும், கனடாவின் NRC (National Research Council) க்கும் இடையில் மருத்துவ ஆய்வில் நீண்டகால உறவு உண்டு. இரண்டு தரப்பும் பல புதிய மருந்துகளை தயாரிக்கும் பணிகளில் இணைந்தது செயல்பட்டு உள்ளன. ஆனால் கரோனாவுக்கான புதிய மருந்தை CanSinoBio கனடாவின் NRC க்கு வழங்காது பின்னடித்து உள்ளது. அதனால் விசனம் கொண்டுள்ளது கனடா.
அண்மையில் சீனாவின் Huawei நிறுவன அதிகாரியான Meng Wanzhou என்பரை அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்ப கனடா கைது செய்ததே CanSinoBio தமது மருந்தை வழங்காது இழுத்தடிக்க காரணம் என்று நம்பப்படுகிறது. மேற்படி மருந்துகள் சீனாவின் சுங்க திணைக்களத்தில் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது
சீனாவில் இருந்து கிடைக்கவிருந்த புதிய Ad5-nCoV என்ற கரோனா மருந்துள் கனடாவின் மூலக்கூறும் உண்டு. 2014 ஆம் ஆண்டு இபோலா (Ebola) மருந்து தயாரிப்புக்கு கனடா வழங்கிய cell line modification சீனாவின் புதிய Ad5-nCoV யிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் சீனாவின் Ad5-nCoV மருந்தை சீன இராணுவத்தின் Chen Wei என்பவரின் அணியே தயாரித்து உள்ளது.
சீனாவின் மருந்து கிடைக்காத நிலையில் கனடா மற்றைய மருந்துகளில் கவனத்தை செலுத்த ஆரம்பித்து உள்ளது. அந்நிலையிலும் இரு தரப்புக்கும் இடையில் உறவு முற்றாக முறிந்து விட்டதாக எந்த தரப்பும் முறைப்படி இதுவரை அறிவிக்கவில்லை.
அதேவேளை சீனா ரஷ்யா, பிரேசில், சிலே (Chile), சவுதி ஆகிய நாடுகளில் 40,000 பேரை தெரிவு செய்து Ad5-nCoV மருந்தின் மூன்றாம் கட்ட சோதனையை செய்யவுள்ளது.