சீனாவில் 100,000 ஆசன உதைபந்தாட்ட மைதானம்

Evergrande

சுமார் 3 மாதங்களாக கொரோனா வைரசால் முடங்கி இருந்த சீனாவில் தற்போது $1.7 பில்லியன் பெறுமதிக்கு 100,000 ஆசனங்களை கொண்ட உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. கடந்த வியாழன் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள் 2022 ஆம் ஆண்டில் பூரணம் அடைந்து அவ்வாண்டு மைதானம் பாவனைக்கு வரும்.
.
Guangzhou Evergrande என்ற உதைபந்தாட்ட குழுவுக்கு சொந்தமான இந்த மைதானம் ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள Guangzhou நகர் பகுதியில் அமையும். இந்த விளையாட்டு குழுவின் தற்போதைய Tianhe மைதானம் 58,500 ஆசனங்களை மட்டுமே கொண்டது.
.
தாமரை வடிவம் கொண்ட இந்த மைதானம் கட்டுமானத்தின் பின் உலகின் மிக பெரிய கால்பந்தாட்ட மைதானமாக அமையும். தற்போது உலகின் பெரிய கால்பந்தாட்ட மைதானமாக பார்சலோனாவில் (Barcelona) உள்ள Camp Nou உள்ளது. 1957 ஆம் ஆண்டு பாவனைக்கு வந்திருந்த Camp Nou மைதான ஆசனங்களின் எண்ணிக்கை 99,354 ஆகும். சீனாவின் புதிய மைதானம் 16 VVIP அறைகளையும், 152 VIP அறைகளையும் கூடவே கொண்டிருக்கும்.
.
இந்த புதிய மைதானம் பாவனைக்கு வந்தபின் சீனா உலக உதைபந்தாட்ட போட்டியான FIFA போட்டியை அங்கு நடத்த முனையும் என்று கருதப்படுகிறது. அத்துடன் 2023 Asian Cup விளையாட்டுகள் இங்கு இடம்பெறும்.
.