நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காதுவிடின் அமெரிக்கா சுமார் 200,000 பேரை கொரோனா வைரசுக்கு பலியாக்கலாம் என்று வைத்தியர் Anthony Fauci கூறியுள்ளார். இந்த வைத்தியரே ரம்ப் அரசின் கொரோனா எதிர்ப்பு நடவடிககைகளுக்கான தலைமை வைத்தியர்.
.
இதுவரை ஏப்ரல் 12 ஆம் திகதி வரவுள்ள Easter தினத்தன்று அல்லது அதற்கு முன் அமெரிக்க வர்த்தகங்கள் மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிய ரம்ப் தற்போது ஏப்ரல் 30 ஆம் திகதிவரை வர்த்தக செயல்பாடுகளை முடக்க இணங்கி உள்ளார்.
.
ஞாயிறு பிற்பகல்வரை 2,479 அமெரிக்கர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்றியோர் தொகை தற்போது 142,106 ஆக உள்ளது. நியூ யார்க் மாநிலத்தில் மட்டும் 59,662 பேர் கொரோனா தொற்றி உள்ளனர்.
.
அதேவேளை பிரித்தானியாவின் உதவி வைத்திய அதிகாரி பிரித்தானியா வளமை நிலைக்கு திரும்ப குறைந்தது 6 மாதங்கள் எடுக்கும் என்று கூறியுள்ளார். இதுவரை 1,228 பேர் பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
.
நாலு மணித்தியால அவகாசத்துடன் நாடளாவிய முடக்கத்தை இந்தியா நடைமுறை செய்ததால், மும்பாய், டெல்கி போன்ற பெருநகரங்களுக்கு வந்தது தினக்கூலி வேலை செய்தோர் நடுத்தெருவில் விடப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வருமானமும் இல்லை, தங்குமிடமும் இல்லை. வாகன போக்குவரத்துக்கள் இல்லாத நிலையில் இவர்கள் நடந்து தம் ஊர்கள் செல்கின்றனர்.
.
இந்நிலைக்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரதமர் மோதி இவர்களுக்கு உதவ $22 பில்லியன் ஒதுக்கி உள்ளார். ஆனால் இந்த பணம் உரியவர்களை அடையுமா என்பது சந்தேகமே.
.
உலக அளவில் 721,584 பேர் தொற்றுக்கு உள்ளாகியும், 33,958 பேர் பலியாகியும், 149,122 பேர் குணமடைந்து உள்ளனர்.
.