Nissan Ghosn லெபனானில், ஜப்பானுக்கு காதில் பூ

Ghosn

Carlos Ghosn என்பவர் பிரான்சின் Renault வாகன தயாரிப்பு நிறுவனமும் Nissan என்ற ஜப்பானின் வாகன நிறுவனமும் 1999 ஆம் ஆண்டு இணைந்த பின் உருவான Renault-Nissan Motor நிறுவனத்தின் முன்னாள் தலைவர். இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் ஜப்பான் நீதிமன்றில் பதியப்பட்டு இவர் 2018 ஆம் ஆண்டு முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். அந்நிலையிலேயே இவர் தப்பி ஓடியுள்ளார்.
.
தற்போது 65 வயதான Ghosn ஒரு பில்லியன் யென் ($9.8 மில்லியன்) பிணையில் தனது ஜப்பான் வதிவிடத்தில் வீட்டுக்காவலில் இருந்தார். இவரின் தங்குமிடத்துக்கு வெளியே வீடியோ கருவியும் பொருத்தி ஜப்பான் பாதுகாவல் இவரை நாளுக்கு 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது.
.
இவரிடம் இருந்த பிரான்சு (France), பிரேசில் (Brazil), லெபனான் (Lebanon)ஆகிய நாடுகளுக்குரிய 3 கடவு சீட்டுகளும் ஜப்பான் நீதிமன்றால் பறிக்கப்பட்டு இருந்தது. Ghosn மேற்படி 3 நாடுகளிலும் குடி உரிமை கொண்டவர்.
.
இவர் மீதான வழக்கு 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட இருந்தது. இந்நிலையில் இவர் ஜப்பானில் இருந்து தப்பி ஓடியது ஜப்பானுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழிநுட்பத்தில் வளர்ந்த ஜப்பானின் பாதுகாவலும் வலுவானது. இவரின் ஜப்பான் வழக்கறிஞரும் தனக்கு எதுவும் தெரியாது என்றுள்ளார்.
.
இவர் செவ்வாய்க்கிழமை லெபனானை அடைந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. லெபனானுக்கும், ஜப்பானுக்கும் இடையில் சந்தேக நபர்களை கைமாற்றும் சட்டம் இல்லை.
.
லெபனான் தொலைக்காட்சி செய்தி ஒன்றின்படி இவரின் வதிவிடத்தில் லெபனானில் இருந்து வந்த இசைக்குழு ஒன்று இசை நிகழ்ச்சி நடத்தியதாகவும், பின்னர் Ghosn பெரியதோர் இசை கருவி ஒன்றுக்குள் ஒளிந்திருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது.
.
இவர் தப்பி ஓட உதவிய தனியார் விமானம் (private jet) மிக சிறிய ஜப்பான் விமான நிலையம் ஒன்றி இருந்து துருக்கி சென்று, பின் அங்கிருந்து லெபனான் சென்றுள்ளது.
.