இன்று சீனா சந்திரனின் மறுபக்கத்துக்கு தரை இறங்கும் கலம் (lander) ஒன்றையும், தரையில் நகரும் கலம் (rover) ஒன்றையும் ஏவி உள்ளது. இந்த இரண்டையும் கொண்ட Chang’e 4 என்ற பெயர் கொண்ட பெரும்கலம் இன்று சீன நேரப்படி அதிகாலை 2:23 மணிக்கு ஏவப்பட்டுள்ளது.
.
சந்திரன் தன்னை தானே சுற்ற சுமார் 28 நாட்கள் தேவைப்படுவதாலும், சந்திரன் பூமியை சுற்றவும் சுமார் 28 நாட்கள் தேவைப்படுவதால், சந்திரனின் ஒருபக்கம் மட்டுமே பூமிக்கு எப்போதும் தெரியும். மறுபக்கம் பூமிக்கு தெரிவதில்லை. இப்பக்கத்தை சிலர் சந்திரனின் இருண்ட பக்கம் என்று அழைத்தாலும், இது இருண்ட பக்கம் அல்ல. இப்பக்கம் சூரியனை நோக்கும்போது, இங்கும் ஒளி வீசும்.
.
இன்று ஏவப்பட்ட கலம் அடுத்த மாதம் சந்திரனில் இறங்கும். இது வெற்றிகரமாக இறங்கினால், பல பரிசோதனைகளை செய்து, அங்கிருந்து தகவல்கள் அனுப்பும்.
.
சந்திரனின் மறுபக்கத்துக்கு மனிதம் செல்வது இதுவே முதல் தடவை. சந்திரனின் மறுப்பக்கத்துடன் பூமியில் இருந்து நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால் அமெரிக்காவும், ரஷ்யாவும் இதுவரை மறுபத்தில் இறங்க முயற்சிக்கவில்லை. மறுபக்கத்தில் இறங்கும் கலங்களுடன் பூமியில் இருந்து தொடர்பு கொள்ள சீனா ஏற்கனவே ஒரு செய்மதி ஒன்றை சந்திரனை சுற்ற வைத்துள்ளது.
.
சந்திரனில் உள்ள மிக பெரிய கிடங்கு ஒன்றின் உள்ளேயே சீனாவின் கலம் இறங்கவுள்ளது. சுமார் 1,500 மைல் விட்டமும், 8 மைல் ஆழமும் கொண்ட இந்த கிடங்கு சந்திரனினதும், பூமியினதும் ஆரம்பங்கள் தொடர்பான தகவல்களை தரலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
.
Chang’e 4 பூமிக்கு திரும்பி வராது. ஆனால் 2019 ஆம் ஆண்டு சீனாவால் ஏவப்படவுள்ள Chang’e 5 சேகரிக்கப்பட்ட சந்திர கனியங்களுடன் பூமிக்கு திரும்பி வரும்.
.