ரஷ்யா, சீனா மிகப்பெரிய யுத்த பயிற்சியில்

RussiaEast

இன்று வியாழன் முதல் என்றுமில்லாத அளவு பெரிய யுத்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளது ரஷ்யா. 1981 ஆம் ஆண்டில் USSR செய்துகொண்ட மிகப்பெரிய யுத்த பயிற்சியிலும் பெரியது இன்று முதல் இடம்பெறும் பயிற்சி. இம்முறை முதல் தடவையாக சீனாவும் பங்குகொள்ள அழைக்கப்பட்டுள்ளது.
.
பசுபிக் கடலோரம், ரஷ்யாவின் Vladivostok நகருக்கு அண்மையிலேயே இந்த பயிற்சி இடம்பெறுகிறது. NATO அணிக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தங்கள் காரணமாக ரஷ்யா ஐரோப்பாவை அண்டிய பகுதியில் பெரும்தொகை இராணுவம் கொண்ட பயிற்சியில் ஈடுபட முடியாது. இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி 5 நாட்களுக்கு நீடிக்கும்.
.
ரஷ்யாவின் 300,000 படையினரும், 36,000 இராணுவ வாகனங்களும், 1,000 யுத்த விமானங்களும், 80 யுத்த கப்பல்களும் Vostok (East அல்லது கிழக்கு) என்ற இந்த பயிற்சியில் ஈடுபடும். சீனாவின் 3,200 படைகளும், 900 இராணுவ வாகனங்களும் கூடவே இணைந்து பயிற்சி பெறும்.
.
அந்த இடத்துக்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதியும், சீன ஜனாதிபதியும் pancake சமைத்து தமது நட்பை கொண்டாடினார்களாம். அத்துடன் சீன ஜனாதிபதி தன்னுடன் 1,000 சீன வர்த்தகர்களும் அழைத்து சென்றுள்ளார். இவர்கள் ரஷ்யாவின் கிழக்கே முதலீடுகளை செய்ய முனைவார்.
.
அதேவேளை இரண்டு தலைவர்களும் தமது வர்த்தக நடவடிக்கைகளின் போது அமெரிக்க டாலர் பாவனையை குறைத்து, தமது சொந்த நாணயங்களை பயன்படுத்தவும் இணங்கி உள்ளனர். அமெரிக்க டாலரின் கட்டுப்பாட்டில் இருந்து தமது வர்த்தகத்தை விடுதலை செய்வதே இச்செயலின் நோக்கம்.

.