Facebook சந்தை பெறுமதி $100 பில்லியனால் வீழ்ச்சி

Facebook

அமெரிக்காவின் Facebook நிறுவன பங்குச்சந்தை பங்கு ஒன்றின் பெறுமதி இன்று வியாழன் சுமார் $41.24 ஆல் வீழ்ந்துள்ளது. நேற்று புதன் Facebook பங்கு ஒன்று (FB, NASDAQ) $217.50 பெறுமதிக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த பங்கு ஒன்று $176.26 பெறுமதிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
.
இன்றைய வீழ்ச்சி காரணமாக Facebook நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி சுமார் $100 பில்லியனால் வீழ்ந்துள்ளது. உலக அளவில், பங்குகளை (stock) கொண்ட நிறுவனம் ஒன்றின் அதிகூடிய ஒருநாள் பங்குச்சந்தை பெறுமதி வீழ்ச்சி இதுவாகும். இதற்குமுன் 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் Intel நிறுவன பங்குச்சந்தை பெறுமதி சுமார் $91 பில்லியனால் வீழ்ந்திருந்தது. தற்போது Facebook நிறுவன சந்தை பெறுமதி $510 பில்லியன் மட்டுமே.
.
சாதாரணமாக நாள் ஒன்றில் சுமார் 24 மில்லியன் Facebook பங்குகள் அமெரிக்காவின் NASDAQ பங்குச்சந்தையில் கைமாறும். ஆனால் இன்று சுமார் 170 மில்லியன் Facebook பங்குகள் கைமாறி உள்ளன.
.
நேற்று மாலை Facebook நிறுவனம் தனது காலாண்டுக்கான கணக்கியல் அறிக்கைகளை வெளியிட்டு இருந்தது. அதில் Facebook நிறுவன வளர்ச்சி வரும் காலங்களில் எதிரிபார்த்ததிலும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
.
அத்துடன் Facebook கடந்த காலாண்டுக்கான தனது வருமானம் $13.2 பில்லியன் என்றுள்ளது. ஆனால் முதலீட்டு ஆய்வாளர் Facebook வருமானம் $13.3 பில்லியன் ஆக இருக்கும் என்று கணித்திருந்தனர்.
.