சிரியாவில் ரஷ்ய தனியார் இராணுவம்

Syria

கடந்த 7ஆம் திகதி (2018-02-07) சிரியாவின் Deir al-Zour என்ற இடத்தில் பல ரஷ்ய ஆயுததாரிகள் அமெரிக்காவின் விமான தாக்குதலுக்கு பலியாகி இருந்தனர். மேற்கு நாட்டு பத்திரிகைகள் பலியானோர் தொகையை 100 வரை இருக்கும் என்று கூறியிருந்தன. ஆனால் ரஷ்யா பலியானோர் தொகை சிறிது என்றிருந்தது. ஆனால் இருதரப்பும் இந்த தாக்குதலை விரைவில் மூடி மறைத்துவிட்டன.
.
உண்மையில் பலியான இந்த ரஷ்ய ஆயுததாரிகளின் விபரங்கள் படிப்படியாக வெளிவந்துள்ளன. அமெரிக்கா அந்நாட்டு தனியார் இராணுவங்களை (private armies) ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தியது போல் ரஷ்யாவும் அந்நாட்டு Wagner Group என்ற தனியார் இராணுவத்தை சிரியாவில் பயன்படுத்தி உள்ளது.
.
நன்கு இராணுவ பயிற்சி பெற்ற Wagner Group (Wagner Private Military Company) உறுப்பினர்கள் ரஷ்ய அரச படையின் அங்கம் அல்ல. இவர்கள் சிரியாவின் அரச படைகளுக்கு உதவும் பொருட்டு வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள்.
.
சிரியாவில் நிலைகொண்டிருந்த இந்த தனியார் இராணுவம் அமெரிக்க படைகளையும், அவர்களுடன் கூடியிருந்த Kurd ஆயுத குழுவையும் தாக்கி உள்ளது. அப்போதே அமெரிக்க யுத்த விமானம் திருப்பி தாக்கி பல Wagner படையினரை அழித்துள்ளது.
.
ரஷ்யாவில் பொருளாதாரம் மந்தமாக உள்ளதாலும், வேலைவாப்புகள் குறைவாக உள்ளதாலும் பலர் தனியார் இராணுவங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் $5,300 ஊதியமாக வழங்கப்படுகிறது என்றும் மரணிப்பவர்களுக்கு சுமார் $90,000 வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
.

தனியார் இராணுவ இழப்புக்களை அவர்களின் அரசுகள் பகிரங்கப்படுத்த வேண்டிய  அவசியம் இல்லை.
.