பூட்டான் பகுதியில் சீனா, இந்தியா முறுகல்

Bhutan

பூட்டானை அண்டிய, இணக்கப்பாடு இல்லாத எல்லைப்பகுதியில் இந்தியாவும் சீனாவும் முறுகல் நிலையில் உள்ளன. இந்த முறுகல் நிலை மேலுமொரு இந்தியா-சீனா யுத்தத்துக்கு வழி செய்யும் முக்கியம் கொண்டதாக இல்லாவிடினும், இரு தரப்பும் பின்வாங்கும் நிலையிலும் இல்லை.
.
கடந்த மாதம் அளவில் இந்தியா-பூட்டான்-சீனா எல்லைகள் சந்திக்கும் பகுதியில் சீனா தனது வீதி ஒன்றின் நீளத்தை ஆயுதம் தரியாத சீனர்களை பயன்படுத்தி அதிகரித்து. அந்த வீதி தனது எல்லைக்குள் நுழைந்துள்ளது என்று கூறிய இந்திய நட்பு நாடான பூட்டான் இந்தியாவிடம் இதை தெரிவித்தது. உடனடியாக இந்தியா தனது படைகளில் சிலவற்றை அப்பகுதிக்கு நகர்த்தியது. இந்தியா தனது படைகளை நகர்த்தியதால் விசனம் கொண்டுள்ளது சீனா. இந்தியா உடனடியாக படைகளை பின்வாங்க வேண்டும் என்றுள்ளது சீனா.
.
சுமார் 88 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இணக்கப்பாடு இல்லாத இந்த பகுதிக்கு இந்தியா உரிமை கொண்டாடவில்லை. இப்பகுதி சீனாவுக்கும், பூட்டானுக்கும் இடையிலான விவகாரம். 1890 ஆம் ஆண்டு இணக்கங்களில் ஒன்று இப்பகுதியை பூட்டானுக்கு உரியது என்கிறது. இன்னோர் இணக்கம் இப்பகுதி சீனாவுக்கு உரியது என்கிறது. இந்நிலையில் இந்தியா இதில் தலையிட இடமில்லை என்கிறது சீனா.
.
இப்பகுதியில் சீனா ஆளுமை கொண்டால், யுத்தம் ஒன்று தோன்றின் சீனா இலகுவில் இந்தியாவை அதன் கிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, அசாம்,மேகாலயா ஆகியவற்றில் இருந்து பிரிக்கலாம் என்று இந்தியா அச்சம் கொண்டுள்ளது.
.
பூட்டானுக்கும், சீனாவுக்கும் இடையில் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லை.
.