மூடியுள்ள மில்லியன் டொலர் வீடுகள்

Toronto

அமெரிக்கா, கனடா போன்ற நாட்டு பெருநகர்களில் மூடப்பட்டு இருக்கும் மில்லியன் டொலர் பெறுமதியான வீடுகள் தொடர்பில் கனடாவின் The Goble and Mail பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
.
டொரோண்டோ (Toronto), வான்கூவர் (Vancouver) போன்ற பெரு நகர்களில் வாழும் மக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவில் வீட்டு விலைகள் உயர்த்திருந்தாலும், இந்நகர்களில் பெருமளவு வீடுகள், குறிப்பாக Condo எனப்படும் உயர்மாடி வீடுகள் உரிமையாளர்களால் மூடி வைக்கப்பட்டு உள்ளனவாம். இவ்வாறு மூடியுள்ள வீடுகளின் உரிமையாளர் பலரும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக சீனர்கள்.
.
இவ்வகை வாதியாத வீட்டு உரிமையாளரால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலாவது இவர்கள் வருமான வரிகள், விற்பனை வரிகள் போன்ற வரிகளை செலுத்தாததால் நகர, மாநில,மற்றும் மத்திய அரசுகள் வருவாயை இழக்கின்றன. இவர்கள் வேறு நாட்டில் இருப்பதால் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இவர்களின் வருமானம் பூச்சியம்.
.
இரண்டாவதாக, வெளிநாட்டவர் முதலீட்டு நோக்கில் வீடுகளை உயர் விலைக்கு கொள்வனவு செய்ய, உண்மையில் இந்நகர்களில் வாழ்ந்து, தொழில் புரியும் மக்கள் வருமானத்தை மீறிய செலவில் குடியிருக்க தள்ளப்பட்டு உள்ளனர். இவர்கள் படிப்படியாக இந்நகர்களை விட்டு வெளியேறவும் கூடும்.
.
மூன்றாவதாக, உண்மை விலைகளுக்கு மாறாக உயர் விலைகளுக்கு வங்கிகள் வீட்டுக்கடன் வழங்கும்போது வங்கிகளும் ஆபத்தில் மாட்டிக்கொள்கின்றன.
.
இந்தக்கட்டுரைப்படி Vancouver நகரில் மட்டும் 14,200 வீடுகள் உரிமையாளர் குடியிராது உள்ளனவாம். அதில் 9.700 வீடுகள் condo என்ற உயர்மாடி வீடுகள் ஆகும். சுமார் 3,400 வீடுகள் தற்காலிக வாடகையில் உள்ளனவாம்.
.
ஆஸ்திரேலியாவின் Melbourne நகரில் சுமார் 64,000 வீடுகள் இவ்வாறு உரிமையாளர் குடியிராது உள்ளனவாம். குறிப்பாக Dockland பகுதியில் 17% வீடுகள் உரிமையாளர்களால் மூடி வைக்கப்பட்டு உள்ளதாம். இந்த தரவை மூடப்பட்டு உள்ள வீடுகள் கொள்வனவு செய்யும் நீரின் அளவைக்கொண்டு கணித்துள்ளனர். எவருமே குடியிராத வீடு நீரை பாவனை செய்யாது.
.
அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் சுமார் 25% வீடுகள், குறிப்பாக condo வகை வீடுகள், உரிமையாளரின் முதன்மை வீடாக அல்லாது உள்ளனவாம். அதாவது உரிமையாளர் வேறு எங்கோ வாழ்கின்றனர்.
.
நீண்ட காலத்தின் பின் தற்போது அரசுகள் இவ்வாறு வெளிநாட்டவர் வீடுகளை கொள்வனவு செய்து மூடி வைப்பதை தடுக்க வரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கின்றன. Vancouver நகரை கொண்ட British Columbia மாகாணம் கடந்த மாதம் முதல் 15% மேலதிக வரியை வீடு கொள்வனவு செய்யும் வெளிநாட்டவரிடம் அறவிட ஆரம்பித்து உள்ளது. நகர அரசுகளும் மாதாந்த வெற்றுட வரிகளை (vacancy tax) அறவிட ஆராய்கின்றன.
.
2011 ஆம் ஆண்டின் கனடிய census தரவுகளின்படி Vancouver நகரில் 7.7% வீடுகளும், Toronto நகரில் 5.4% வீடுகளும், Calgary நகரில் 5% வீடுகளும் மூடி இருந்துள்ளனவாம்.
.

கடந்த மாதம் Toronto நகரில் சராசரி வீட்டு விலை C$ 782,051 ஆகும். அக்காலத்தில் Vancouver நகரில் சராசரி வீட்டு விலை C$ 700,500 ஆகும்.
.