வெளிநாட்டவர் வாடகைத்தாய் கொள்ள இந்தியாவில் தடை

India

மருத்துவ குறைபாடுகள், முதிய வயது போன்ற காரணங்களால் குழந்தை கொள்ளலில் குறைபாடு கொண்ட பெண்கள் (infertile) சுகதேகியான இன்னோர் பெண்ணின் கருப்பையை 10 மாதம் வாடகைக்கு எடுப்பதுண்டு. அதற்கு பெரும் பணமும் சிலவேளைகளில் கொடுக்கப்படும். இவ்வாறு இந்திய பெண்கள் வெளிநாட்டு குடும்பத்துக்கு வாடகை தாய் (surrogate mother) ஆவதை சட்டப்படி தடை செய்கிறது இந்தியா.
.
இந்தியாவில் ஒரு வாடகை தாயை அமர்த்த சுமார் $15,000 செலவாகும். அதில் சுமார் $5,000 மட்டுமே வாடகை தாயை அடையும். ஆனால் அமெரிக்காவில் சுமார் $200,000 செலவாகும். அங்கு வாடகை தாய்க்கு சுமார் $25,000 கிடைக்கும். இந்திய வாடகை தாய்மார் இந்தியாவுக்கு சுமார் $400,000,000 வருட வருமானம் வழங்கியதாக கணிக்கப்படுள்ளது. சிலர் இந்த தொகை உண்மையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர்.
.
இந்த விடயத்தில் தாய்லாந்தும் ஒரு முன்னணி நாடு. ஆனால் அங்கு அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் மக்களிடையே இவ்விடயத்தில் பெரும் வெறுப்புணர்வை உருவாக்கி இருந்தன. அவுஸ்ரேலிய தம்பதி ஒன்று வாடகை தாய் மூலம் கிடைத்த இரணைகளில் நோய்வாய்பட்ட ஒன்றை தாய்லாந்து வாடகை தாயிடம் விட்டுவிட்டு சுகதேகியான குழந்தையை மட்டும் அவுஸ்ரேலியா எடுத்து சென்றது.
.
இந்த வருட ஆரம்பத்தில் இன்னுமோர் அவுஸ்ரேலிய குடும்பம் இரணைகளில் ஒன்றான ஆண்குழந்தையை இந்திய வாடகை தாயிடம் கொடுத்துவிட்டு பெண் குழந்தையுடன் தம்நாடு திரும்பி உள்ளனர். அவ்விடயம் அவுஸ்ரேலிய அரசுக்கும் தெரியும். அந்த தம்பதி தமக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உண்டு என்றும் அதனால் இன்னுமோர் ஆண் குழந்தை வேண்டாம் என்றனராம்.
.