வரும் ஜூன் மாதம் சேவைக்கு வரவுள்ள Huajiang (குவாஜியாங்) Canyon Bridge என்ற Baipan ஆற்றை கடக்கும் சீன பாலம் உலகின் மிக உயர்ந்த பாலமாகிறது. இந்த பாலத்தில் இருந்து அதிகூடிய பள்ளமான பகுதியின் ஆழம் 625 மீட்டர் (2,051 அடி) ஆக இருக்கும்.
தற்போது ஆற்றுடன் கூடிய இந்த பள்ளத்தாக்கை கடக்க 70 நிமிடங்கள் தேவைப்படுகிறது. மேற்படி பாலம் சேவைக்கு வந்தபின் அதே தூரத்தை 1 நிமிடத்தில் கடக்கலாம்.
சீனாவின் Guizhou மாநிலத்தில் கட்டப்படும் இந்த பாலத்தின் மொத்த நீளம் 2,890 மீட்டர் (2.89 km). நடுவில் உள்ள இரண்டு தூண்களுக்கு இடையில் தொங்கும் பால பகுதி மட்டும் 1,420 மீட்டர் (1.42 km) நீளமானது. இந்த தொங்கு பாலத்தை காவும் இரண்டு தூண்களும் 262 மீட்டர் உயரமானவை.
தற்போதைய அதி உயர் பாலம் இதே Beipan ஆற்றை சுமார் 200 km தொலைவில் கடக்கிறது. இதை புதிய Huajiang பாலம் இரண்டாம் இடத்துக்கு தள்ளும்.
உலகின் முதல் 20 உயர்ந்த பாலங்களில் தற்போது 15 பாலங்கள் சீனாவில் உள்ளன. அத்துடன் அதி உயர்ந்த முதல் 5 பாலங்களும் சீனாவிலேயே உள்ளன.