அமெரிக்க F-35 யுத்த விமானத்தை கைவிடும் NATO நாடுகள்?

அமெரிக்க F-35 யுத்த விமானத்தை கைவிடும் NATO நாடுகள்?

அமெரிக்க சனாதிபதி ரம்ப் NATO நாடுகள் மீது வரி யுத்தம் தொடர்வதால் குறைந்தது 2 NATO நாடுகள் F-35 என்ற அமெரிக்க யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்த முனைகின்றன. 

மிக புதிய F-35 யுத்த விமானங்கள் அமெரிக்காவின் Lockheed Martin என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது. இந்த விமானம் எதிரிகளின் ரேடார் கண்காணிப்பில் அகப்படாத stealth நுட்பங்களை கொண்டது.

NATO நாடான கனடா 88 இவ்வகை F-35 யுத்த விமானங்களை $19 பில்லியனுக்கு கொள்வனவு செய்ய இணங்கி இருந்தது. ஆனால் கனடா தற்போது வேறு யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய ஆராய்கிறதாக வெள்ளிக்கிழமை கனடிய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். கனடாவின் இந்த முயற்சி ரம்பை பெரும் விசனத்துக்கு உள்ளாகும்.

கனடா ஏற்கனவே 16 இவ்வகை F-35 யுத்த விமானங்களுக்கு பணம் செலுத்தி உள்ளது. இந்த 16 விமானங்களும் அடுத்த ஆண்டு கனடா வரும். மிகுதியையே கனடா நிறுத்தலாம்.

கனடா F-35 விமான இணக்கத்தை கைவிடுவதானால் Lockheed Martin நிறுவனத்துக்கு நட்டஈடு செலுத்தும் நிலையும் ஏற்படலாம்.

சுவீடன் நாட்டு Saab நிறுவனம் தயாரிக்கும் F-39 Gripen வகை யுத்த விமானம் கனடா கொள்வனவு செய்யக்கூடிய இன்னோர் வகையாக உள்ளது. Saab தனது விமானங்களை கனடாவில் தயாரிக்கவும் இணங்கி உள்ளது. அது கனடாவுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும்.

வியாழக்கிழமை போர்த்துக்கல் என்ற NATO நாடும் அமெரிக்காவின் F-35 யுத்த விமான கொள்வனவை கைவிட்டு உள்ளதாக கூறியுள்ளது.