ஏப்ரல் 2 முதல் இந்தியா மீதும் ரம்ப் இறக்குமதி வரி 

ஏப்ரல் 2 முதல் இந்தியா மீதும் ரம்ப் இறக்குமதி வரி 

ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதிய இறக்குமதி வரிகளை அறவிடவுள்ளார். இந்த வரியால் குறிப்பாக இந்திய மருந்து உற்பத்தி பெரும் பாதிப்பு அடைய உள்ளன.

கடந்த கிழமை இந்திய வர்த்தக அமைச்சர் Piyush Goyal வெள்ளை மாளிகை விரைந்து ஒரு இணக்கத்துக்கு வர முனைந்தாலும் அது பயன் அளிக்கவில்லை.

அமெரிக்கர் பயன்படுத்தும் மருந்துகளில் சுமார் 50% இந்தியா தயாரிக்கும் generic மருந்துகளே. பிரபல அமெரிக்க மருந்துகளுடன் ஒப்பிடுகையில் இந்திய மருந்துகள் மிக மலிவு. 2022ம் ஆண்டு மட்டும் இந்திய மருந்துகளால் அமெரிக்காவின் மருத்துவம் $219 பில்லியனை சேமித்தாக கூறப்படுகிறது.

இந்தியா சுமார் $12.7 பில்லியன் பெறுமதியான மருந்துகளை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு வரி எதுவும் இன்றி ஏற்றுமதி செய்கிறது. ஆனால் ஆண்டுதோறும் சுமார் $0.5 பில்லியன் அமெரிக்க மருந்துகளுக்கு இந்தியாவில் 10.91% இறக்குமதி வரி அறவிடப்படுகிறது.

ஏற்கனவே ரம்ப் சீனா மீது நடைமுறை செய்த இறக்குமதி வரியால் அமெரிக்காவில் மருந்து பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. உலக அளவில் சீனாவே 40% மருந்து பொருட்களின் மூல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் 87% மருந்துகளுக்கான மூல பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.