அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆட்சியில் ரம்புக்கு அடுத்து இரண்டாவது பலம் கொண்ட நபராக உள்ளவர் இலான் மஸ்க் (Elon Musk). ஆனால் அவரின் மின்னில் இயங்கும் கார் தயாரிப்பு நிறுவனமான Tesla பங்குச்சந்தையில் சுமார் $700 பில்லியனை கடந்த 3 மாதங்களில் இழந்துள்ளது. இது சுமார் 45% இழப்பு.
ரம்ப் சனாதிபதி தேர்தலில் வென்றபின், டிசம்பர் 17ம் திகதி இலானின் Tesla நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி $1.5 டிரில்லியன் ($1,500 பில்லியன்) பெறுமதியை கொண்டிருந்தது. தற்போது Tesla வின் பங்குச்சந்தை பெறுமதி சுமார் $845 பில்லியன் மட்டுமே.
ஏற்கனவே சீனாவின் BYD போன்ற கார் நிறுவங்கள் Tesla வுக்கு பலத்த போட்டியை வழங்கிய நிலையில், தற்போது இலானின் அரசியல் அட்டகாசங்கள் Tesla காரின் ஆதரவுக்கு எதிராக திரும்பி உள்ளன. அது Tesla வின் வருமானத்தை பாதிக்கிறது.
Tesla வின் பங்குச்சந்தை பெறுமதி பாடப்புத்தகங்களில் கூறுவது போல் தற்கால வருமானத்தையோ, அதனால் கிடைத்த இலாபத்தையோ மட்டும் கருத்தில் கொள்ளவில்லை. Tesla பங்குகளில் முதலிடுவோர் Tesla எதிர்காலத்தில் மேலும் வளரும் என்ற நம்பிக்கையிலேயே. அந்த நம்பிக்கையே தற்போது தளர ஆரம்பித்துள்ளது.