கனடாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு சீனா மேலதிக இறக்குமதி வரியை (tariffs) சனிக்கிழமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனா தயாரிக்கும் மின்னில் இயங்கும் கார், மற்றும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கு கனடா இறக்குமதி வரி நடைமுறை செய்தமைக்கு பதிலடியே சீனாவின் இன்றைய புதிய வரி.
கனடாவின் rapeseed எண்ணெய் (canola vegetable எண்ணெய் வகை), oil cake, கடலை போன்றவற்றுக்கு சீனா 100% இறக்குமதி வரியும், கடலுணவு, பன்றி இறைச்சி போன்றவற்றுக்கு 25% வரியும் அறவிடும். சீனாவின் இந்த புதிய வரி மார்ச் மாதம் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
பொதுவாக அமெரிக்கா சீனா மீது விதிக்கும் வரிகளையும், தடைகளையும் கனடா பிரதி செய்து நடைமுறை செய்வதுண்டு. சீனாவின் மின்னில் இயங்கும் கார்கள் மீதான தடையும் அவ்வாறான ஒன்றே. அப்போது பைடென் ஆட்சி செய்தார்.
ஆனால் தற்போது ரம்பின் ஆட்சியில் கனடா இரு தரப்பிலும் இருந்து அடி வாங்குகிறது.
அமெரிக்காவுக்கு அடுத்து கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தக உறவு நாடு சீனா.
2021ம் ஆண்டு உலகம் முழுவதும் மொத்தம் 72 மில்லியன் தொன் rapeseed உற்பத்தி செய்யப்பட்டது. அதில் 14.7 மில்லியன் தொன் சீனாவிலும், 14.2 மில்லியன் தொன் கனடாவிலும், 10.2 மில்லியன் தொன் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட்டது.