அமெரிக்க சனாதிபதி கடந்த மாதம் அறிவித்து பின் ஒரு மாத காலம் பின்தள்ளிய கனடா, மெக்சிக்கோ பொருட்கள் மீதான 25% மேலதிக இறக்குமதி வரியும், சீனா பொருட்கள் மீதான 20% மேலதிக வரியும் இன்று செவ்வாய் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கனடா, மெக்சிக்கோ, சீனா பதிலுக்கு தாமும் அமெரிக்க பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறை செய்கின்றன.
இந்த வரிகளின் தாக்கம் சில பொருட்களின் விலைகளில் உடனடியாகவும், சிலவற்றில் சில கிழமைகளிலும் தெரியவரும். இந்த 3 நாடுகளும் மட்டுமன்றி அமெரிக்காவும் இந்த வரிகளால் பொருளாதார பின்னடைவை அடையும்.
அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் 40% இறக்குமதி கனடா, மெக்சிக்கோ, சீனா ஆகிய 3 நாடுகளில் இருந்து வருகின்றன. அதன் பெறுமதி சுமார் $1.4 டிரில்லியன் (1,400 பில்லியன்)
மெக்சிக்கோவில் இருந்து கனடாவுக்கு பெருமளவு காய்கறி, பழவகை இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை அமெரிக்கா ஊடு தரையையே பயணித்தாலும் இவை ரம்பின் வரிக்கு உட்படா.