முன்னாள் அமெரிக்க சனாதிபதி பைடென் காலத்தில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து யூக்கிறேனுக்கு ஆதரவாக நின்று ரஷ்யாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. பைடென் அரசு யூக்கிறேனுக்கு பலநூறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுத உதவிகளையும் செய்தது. ஆனால் ரம்ப் அமெரிக்கா ரஷ்யாவுடன் இணைந்து யூக்கிறேனுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிராக போர்க்கொடி தூக்குகிறது.
யூக்கிறேனை ரஷ்யா ஆக்கிரமித்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஐ.நா. கண்டித்து திங்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட முனைந்த வேளையிலேயே இந்த அவலம் பதிவாகி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளிலும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, ரஷ்யாவை கண்டித்து ஐ.நா. பொது சபையில் தீர்மானம் வெளியிட முனைந்த வேளையில் பைடெனின் அமெரிக்கா ஆதரவாக வாக்களித்துள்ளது.
ஆனால் 3ம் ஆண்டு நிறைவில் ரம்பின் அமெரிக்கா வழமைக்கு மாறாக ரஷ்யா, வட கொரியா, பெலரூஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐரோப்பிய தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளை போலவே ஐரோப்பாவின் இந்த தீர்மானமும் ரஷ்யாவை சாடி இருந்தது.
பின் அமெரிக்கா ரஷ்யாவை சடாத வகையில் வரைந்த தனது தீர்மானம் ஒன்றை ஐ.நா. பாதுகாப்பு சபையில் 10 வாக்குகள் பெற்று நிறைவேற்றியது. வீட்டோ வாக்குகளை கொண்ட பிரித்தானியா, பிரான்ஸ் வாக்களிக்கவில்லை.
அமெரிக்கா வரைந்து பாதுகாப்பு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் பொது சபையில் ரஷ்யாவை கண்டிக்கும் இணைப்புகளுடன் வாக்கெடுப்புக்கு வந்தபோது விசனம் கொண்ட அமெரிக்கா எதிர்த்து வாக்களித்துள்ளது.
ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் விரோதி ஆகியுள்ளது ஐரோப்பா.