அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனா மீது பெரும் தடைகளை விதித்தாலும் டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 10.7% ஆல் வளர்ச்சி அடைந்துள்ளது என்று இன்று திங்கள் வெளிவந்த தரவுகள் கூறுகின்றன.
ரம்ப் இந்த மாதம் சனாதிபதி ஆனவுடன் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை அதிகரிக்கலாம் என்ற பயத்தில் மேற்கு நாடுகளின் வர்த்தகங்கள் அதிகரித்த இறக்குமதியை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ஆசியாவிலும் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.
அதேவேளை சீனாவின் இறக்குமதி 1% ஆல் அதிகரித்து உள்ளது.
டிசம்பர் மாதம் மட்டும் சீனாவின் மேலதிக ஏற்றுமதி (surplus = ஏற்றுமதி – இறக்குமதி) $104.84 பில்லியன் ஆக்கவுள்ளது. 2024ம் ஆண்டுக்கான சீனாவின் மொத்த surplus $992.2 பில்லியன் ஆகவுள்ளது.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி 15.6% ஆல் அதிகரித்து உள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 8.8% ஆல் அதிகரித்து உள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதி 19% ஆல் அதிகரித்து உள்ளது.
சுமார் 150 நாடுகளுக்கு தற்போது சீனாவே முதல் பெரிய வர்த்தக நாடாகும். 2024ம் ஆண்டில் சீனாவின் மொத்த எல்லை கடந்த வர்த்தகம் (ஏற்றுமதி+இறக்குமதி) $6 டிரில்லியன் ($6,000 பில்லியன்) ஆகும். அதுவும் 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% ஆல் அதிகரித்து உள்ளது.