வருங்கால அமெரிக்க சனாதிபதி அண்மையில் மெக்சிகோ, கனடா ஆகிய இரு நாடுகளிலும் இருந்து அமெரிக்கா வரும் அனைத்து பொருட்களுக்கும் 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக மிரட்டி இருந்தார். இந்த கூற்று ஒரு உத்தியோக கூற்று அல்ல.
ஆனால் இன்று வெள்ளி கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ரம்பை சந்திக்க அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு பறந்துள்ளார். வெள்ளி இரவு ரம்பும், ரூடோவும் ஒன்றாக இரவு போசனம் உண்பர்.
ரம்ப் கூறியபடி இலகுவில் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 25% இறக்குமதி அறவிட முடியாது. அவ்வாறு செய்வது அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது நடைமுறையில் உள்ள NAFTA (அல்லது USMCA) வர்த்தக உடன்படிக்கைக்கு முரணானது.
ரம்ப் தனது 25% வரியை அறவிட முன் முதலில் NAFTA விலிருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு செய்வதும் பல ஆண்டுகள் எடுக்கும். உதாரணமாக GM, Ford, Chrysler போன்ற அமெரிக்காவின் கார் நிறுவனங்கள் NAFTA உடன்படிக்கைக்கு ஏற்ப தமது தொழிற்சாலைகளை மெக்சிக்கோவுக்கு நகர்த்தி உள்ளன. அவற்றை மீண்டும் அமெரிக்கா எடுக்க பல ஆண்டு காலமும், பல பில்லியன் பணமும் தேவைப்படும்.
அத்துடன் NAFTA முறிந்தால் கனடாவில் இயங்கும் Walmart, Home Depot, Best Buy, Cosco, Amazon போன்ற அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டும் அல்லது அவற்றின் கனடிய கிளைகள் 100% கனடிய நிறுவனமாக பிரிக்கப்படல் அவசியம். இதை எல்லாம் சிந்திக்கும் நபர் அல்ல ரம்ப்.
ரூடோவின் பயணத்தின் உள்நோக்கம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.