அமெரிக்காவில் சீனரை பின் தள்ளிய இந்திய மாணவர் தொகை

அமெரிக்காவில் சீனரை பின் தள்ளிய இந்திய மாணவர் தொகை

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வரும் இந்திய மாணவர்களின் தொகை முதல் முறையாக சீன மாணவர் தொகையிலும் அதிகமாகி உள்ளது. அமெரிக்க-சீன முறுகல் நிலை காரணமாக சீன மாணவர் அமெரிக்கா செல்வது குறைந்து வருகிறது.

அமெரிக்க State Department நவம்பர் 18ம் திகதி வெளியிட்ட தரவின்படி தற்போது அமெரிக்காவில் 331,602 இந்திய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இத்தொகை கடந்த ஆண்டிலும் 23% அதிகம். அதேவேளை இக்காலத்தில் 277,398 சீன மாணவர்கள் மட்டுமே அமெரிக்காவில் கல்வி கற்கின்றனர். இத்தொகை கடந்த ஆண்டிலும் 4.2% குறைவு.

இந்திய, சீன மாணவ தொகைக்கு அடுத்து உள்ளவை தென் கொரிய, கனடிய, தாய்வான் மாணவர்தொகைகளே. இவை மூன்றும் 50,000 இலும் குறைவு.

2019-2020 கல்வி ஆண்டில் 372,532 சீன மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்க சென்று இருந்தனர்.

அமெரிக்காவின் சீன எதிர்ப்பு வாதங்கள் சீன மாணவர் அமெரிக்கா செல்வது குறைய காரணம் என்று நம்பப்படுகிறது. சீன மாணவர் அமெரிக்காவுக்கு பதிலாக ஐரோப்பா போன்ற வேறு நாடுகளை நாடியிருக்கலாம்.

2023ம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வந்த மாணவர்கள் சுமார் $50 பில்லியன் வருமானத்தை அமெரிக்காவுக்கு வழங்கி உள்ளனர்.