இன்று ஞாயிறு இந்திய ஒலியிலும் பல மடங்கு வேகமாக செல்ல வல்ல Hypersonic ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இவ்வகை ஏவுகணைகளை ஏற்கனவே கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியா நாலாவது நாடாக இணைகிறது.
இந்தியாவின் இந்த ஏவுகணை குறைந்தது 1,500 km தூரம் சென்று தாக்க வல்லது என்று இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்துக்கு கிழக்கே APJ அப்துல் கலாம் தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த சோதனை ஏவுகணை கடலில் குறியை சரியாக தாக்கியதாக இந்தியா கூறியுள்ளது.
Hypersonic ஏவுகணைகள் ஒலியின் வேகத்திலும் குறைந்தது 5 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும். அதனால் ஏவப்பட்ட இவ்வகை கணைகளை எதிரி தடுப்பது மிக கடினமாகும். ஆனாலும் சில புதிய ஏவுகணை தடுப்பு ஏவுகணைகளை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கொண்டுள்ளன.
சில தினங்களுக்கு முன் சீனாவில் இடம்பெற்ற Zhuhai Airshow 2024 நிகழ்வில் சீனா பல புதிய இராணுவ தளபாடங்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றில் J-35 stealth யுத்த விமானம், J-20 stealth யுத்த விமானம், J-15D யுத்த விமானம் ஆகியனவும் அடங்கும்.
சீனாவின் 6ம் சந்ததி யுத்த விமானமான Baidi (White Emperor) யும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது (மேலுள்ள படம்). இந்த விமானம் வளிமண்டலத்துக்கு அப்பாலும் சென்று தாக்க வல்லது என்று கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த யுத்த விமான தயாரிப்பு வேலைகளை அமெரிக்கா 2022ம் ஆண்டே அறிந்து இருந்தது. அமெரிக்காவும் இப்பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் உலகின் எந்த நாட்டிலும் அவ்வகை யுத்த விமானம் தற்போது சேவையில் இல்லை.