இந்திய-ரஷ்ய வர்த்தகத்தை தாக்கும் நாணய இடர்பாடு

இந்திய-ரஷ்ய வர்த்தகத்தை தாக்கும் நாணய இடர்பாடு

இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகத்துக்கு பயன்படக்கூடிய நாணயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கலை இந்திய வெளியுறவு அமைச்சர் S. ஜெய்சங்கர் India-Russia Business Forum அமர்வில் ஏற்று கொண்டதுடன் அதற்கு ஒரு தீர்வு அவசியம் என்றும் கூறியுள்ளார்.

தற்போது ஆண்டு ஒன்றில் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் $66 பில்லியன் ஆக உள்ளது. இதில் பெருமளவு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கொள்வனவு செய்யும் எரிபொருளுக்கானது.

ரஷ்யா இந்தியாவிடம் இருந்து பெருமளவில் கொள்வனவு செய்ய எதுவும் இல்லை. அதற்கு சில பில்லியன் டாலர் போதுமானது. அத்துடன் இந்தியா வேற்று நாட்டு பொருட்களை கொள்வனவு செய்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவின் பூகோள நிலையம் வசதியாக இல்லை. அதை சீனா வசதியான பூகோள நிலையம் காரணமாக இலகுவில் செய்கிறது.

அதனால் இந்தியா, இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு செய்த ஏற்றுமதியை கழித்து பார்த்தால் ஆண்டுக்கு சுமார் $57 பில்லியன் பெறுமதியை பணமாக செலுத்த வேண்டி உள்ளது. அந்த பணத்தை எந்த நாணயத்தில் வழங்குவது என்பதே இந்தியாவுக்குரிய கேள்வியாகிறது.

ரஷ்யா மீதான டாலர் தடை போன்ற மேற்கு நாடுகளின் தடை காரணமாக இந்தியா மேற்கு நாடுகளின் நாணயத்தை பயன்படுத்த முடியாது. அத்துடன் ரஷ்யா தடைகளை முறியடிக்க சீனாவை முழு அளவில் பயன்படுத்துவதால் ரஷ்யாவுக்கு அதிகம் சீன நாணயம் தேவைப்படுகிறது.

ஆனால் இந்தியா சீன நாணயத்தை பயன்படுத்துவதன் மூலம் சீன நாணயத்தை வலுவாக்கவும் விரும்பவில்லை. அதையே ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த இடருக்கு விரைவில் ஒரு தீர்வு காணவேண்டி உள்ளது.