சீனா அணு சக்தி விமானம் தாங்கி தயாரிக்கிறது

சீனா அணு சக்தி விமானம் தாங்கி தயாரிக்கிறது

சீனா அணு சக்தி மூலம் இயங்கும் (nuclear-powered) விமானம் தாங்கி கப்பல் ஒன்றை தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க ஆய்வாளர் அறிந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள Middlebury Institute of International Studies என்ற அமைப்பு Planet Labs PBC செய்மதி மூலம் எடுத்த புகைப்படங்களை ஆராய்ந்து உண்மையை உறுதிப்படுத்தி உள்ளது.

தற்போது அமெரிக்காவிடம் 11 விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன. அவை அனைத்தும் அணு சக்தி மூலம் இயங்குபவை. பிரான்சின் புதிய விமானம் தாங்கி கப்பலும் அணு சக்தி மூலம் இயங்குவது. உலகில் வேறு எங்கும் அணு சக்தி மூலம் இயங்கும் விமானம் தாங்கிகள் இல்லை. சீனா இந்த குழுவில் இணையும் 3வது நாடாகும்.

சீனாவின் முதல் விமானம் தாங்கியான Liaoning  ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பழைய விமானம் தாங்கி. அதை படித்து சீனா சற்று பெரிதாக தயாரித்த விமானம் தாங்கி Shandong. சீனாவின் 3ஆம் விமானம் தாங்கி முற்றாக சீனாவின் அறிவில் தயாரிக்கப்பட்ட Fujian. இந்த மூன்றும் பழைய முறையில் இயங்குபவை.

சீனாவின் 4ஆவது விமானம் தாங்கியே தற்போது அறியப்படும் அணு சக்தியில் இயங்கும் விமானம் தாங்கி.

அணு சக்தி மூலம் இயங்கும் விமானம் தாங்கிகள் நீண்ட காலம், நீண்ட தூரம் எரிபொருள் நிரப்பும் அவசியம் இன்றி பயணிக்கும். ஆனாலும் அணு சக்தி மூலம் இயங்கும் கப்பல்கள் விலை மிக உயர்ந்தவை. அதனாலேயே பிரித்தானியா Queen Elizabeth வகை விமானம் தாங்கியில் அணு சக்தியை பயன்படுத்துவதை தவிர்த்து. 

வேறு சில ஆய்வுகள் சீனா ஒன்றல்ல, இரண்டு விமானம் தாங்கிகளை தற்போது தயாரிக்கிறது என்றும் கூறியுள்ளன.

தற்போது சீனா ஆண்டு ஒன்றில் சில நூறு கப்பல்களை தயாரிக்கும் வசதியுடன் உள்ளது. அதேவேளை அமெரிக்கா ஆண்டு ஒன்றில் சுமார் 5 கப்பல்களை தயாரிக்கும் வசதியுடனேயே உள்ளது.

தற்போது உலகத்தில் அதிக யுத்த கப்பல்களை கொண்ட நாடாக சீனா உள்ளது. இதனிடம் 370 யுத்த கப்பல்கள் உள்ளன.